நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், டெக்சி ஓட்டுநர்கள் அனைவரும் பிரிம் உதவித் தொகை பெறத் தகுதி பெறுகிறார்கள் என்பதுடன் 1மலேசியா டெக்சி உதவி அட்டைகளையும் பெறுவார்கள் என்று அறிவித்தார்.
அந்த அட்டைகளைக் கொண்டு பெட்ரோனாசில் ரிம800 பெறுமதியுள்ள எண்ணெய் அல்லது எரிவாயுவை நிரப்பிக் கொள்ளலாம். இந்தத் தொகை எதிர்காலத்தில் உயர்த்தப்படும் சாத்தியமும் உண்டு- அதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு.
“டெக்சி ஓட்டுநர்களை மறக்க மாட்டேன். அரசாங்கம் அதன் இருதயத்துக்கு அருகிலேயே உங்களை வைத்துள்ளது. நீங்கள் எனக்கு உதவினால் நான் உங்களுக்கு உதவுவேன்”, என்று நஜிப் கூறினார்.
கூடியிருந்த சுமார் பத்தாயிரம் டெக்சி ஓட்டுநர்களில் மிகப் பலர் அதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தனர். நஜிப்பின் ‘எனக்கு உதவுங்கள், உங்களுக்கு உதவுவேன்’ செய்தி அவர்களுக்குத் தெளிவாகவே புரிந்தது.
அதனால்தான் அவர்களில் ஒருவர் அப்துல் அசீஸ் யூசுப் என்பார், அதைத் தேர்தல் கால “dedak”(தீனி) என்றார்.
“இதுதான் “dedak”. தேர்தல் காலம் அல்லவா அதன் கொடுக்கிறார்கள். எவ்வளவு காலமாக (மின் -அழைப்பு டெக்சிகளுக்கு எதிராக) போராடி வருகிறோம், தெரியுமா?
“இது (எரிபொருள் உதவி அட்டை) ஓரளவுக்குத்தான் உதவும். இரண்டு, மூன்று மாதங்களில் முடிந்து விடும்.
“பணம் கொடுக்க முடியாது அதுதான் அட்டைகளைக் கொடுக்கிறார்கள். இது dedak. விலங்குகளுக்குத் தீனி கொடுப்பதுபோல் கொடுக்கிறார்கள்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இந்த உதவி தன்னைப் போன்ற டெக்சி ஓட்டுநர்களின் அடிப்படைப் பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை என்று அசீஸ் மேலும் கூறினார். மின்- அழைப்பு டெக்சிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்றவர் குற்றம் சாட்டினார்.
“நாங்கள் அதிருப்தி கொண்டிருக்கிறோம். எதிலும் நியாயம் இல்லை என்கிறபோது அரசாங்கம் மாற வேண்டும் என்று விரும்புகிறோம். அப்புறம் என்ன, துன் (மகாதிர் முகம்மட் வந்திருக்கிறார், பக்கத்தான் ஹரப்பான் வந்திருக்கிறது, மாற்றுவோம்”, என்றார்.