அஸ்மின் அள்ளிக் கொடுத்தார்: மடிக்கணிகள், ரொக்கம், ஐபேட்ஸ்

 

சிலாங்கூர் பராமரிப்பு அரசின் மந்திரி பெசார் அஸ்மின் அலி அன்பளிப்புகளை ரொக்கமாகவும், மடிக்கணிகளாகவும், ஐபேட்களாகவும்கூட தமது தொகுதி மக்களுக்கு புக்கிட் அந்தாராபங்சா மற்றும் கோம்பாகில் இன்று அள்ளிக்கொடுத்தார்.

நான்கு நிகழ்ச்சிகளில் அஸ்மின் இந்த உதவிப் பொருள்களை வழங்கினார். அவற்றில் இரண்டு நிகழ்ச்சிகளில் மலேசியாகினி பங்கேற்க முடிந்தது.

யுகே பெர்டானா மற்றும் கம்போங் கெர்டாஸ் ஆகிய இடங்களில் நடந்த இரு நிகழ்ச்சிகளில் வழங்கிய உதவிப் பொருள்களின் மதிப்பு ரிம2.24 மில்லியன் ஆகும்.

இளைஞர்களுக்கு, மாணவர் உதவியாக ரிம44,000 ரொக்கமாகவும் 14 மடிக்கணிகளையும் கொடுத்தார். கிராமத் தலைவர்களுக்கு 6 மடிக்கணிகளை கொடுத்தார்.

உதவியில் பெரும் பகுதி சமூகத் திட்டங்கள் மற்றும் பொது வசதிகளுக்கு ரொக்க நிதியாக ரிம5,000க்கும் ரிம75,000க்கும் இடையில் வழங்கப்பட்டது.

ஏழைகளின் வாழ்க்கை மற்றும் மருத்துவ செலவிற்காக ரொக்க உதவியாக ரிம500க்கும் ரிம1,000 க்கும் இடையில் வழங்கினார்.

யுகே பெர்டானாவில் பேசிய அஸ்மின், மே 9 இல் நடைபெறவிருக்கும் 14 ஆவது பொதுத் தேர்தலின் காரணமாக இவை கொடுக்கப்படுகிறது என்பதை மறுத்தார்.

மே 9 க்காக நாங்கள் இன்று கொடுக்கவில்லை. நாங்கள் ஒவ்வொரு வாரமும் (உதவி) கொடுக்கிறோம். அதனால்தான் (சமூக) தலைவர் நான் இங்கு இருக்கும் போது அதிகம் கேட்க தெரிந்து வைத்துள்ளார்.

“அது ஓகே. அது அவரது சட்டைப்பைக்குள் போகவில்லை. அந்தப் பணம் மக்களுக்கு. இன்று நாங்கள் மசூதிகள், சுராவ்கள், அரசுசார்பற்ற அமைப்புகள், இளைஞர்கள், மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு கொடுக்கிறோம். இது ஒரு கருணையுள்ள மாநிலம்,” என்று அஸ்மின் கூறினர்.

கூட்டத்தினரில் பலர் “அமின்” என்று முழக்கமிட்டனர். மற்றவர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

“அமின், அமின், அமின், வாக்களிக்க மறந்து விடாதீர்கள்”, என்று அஸ்மின் கூட்டத்தினரின் சிரிப்பு ஒலிக்கிடையில் கூறினார்.

பிஎன் பராமரிப்பு அரசு தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற உதவிகள் வழங்கியதை எதிர்க்கட்சிகள் அடிக்கடி குறைகூறி வந்துள்ளன. அவற்றை இலஞ்சத்திற்கு ஒப்பிட்டனர்.