ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டியில் ஒரு தமிழ்ப்பள்ளி வேண்டும், குடியிருப்பாளர்கள் கோரிக்கை

இன்று, ஜொகூர், ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டியில், ஒரு தமிழ்ப்பள்ளி அமைக்க வேண்டுமெனக் கோரி கலந்துபேசிய சுற்றுவட்டார மக்கள், ஒரு நடவடிக்கைக் குழுவை அமைத்தனர்.

ஜொகூர் பாரு மாநகரில் இருந்து, சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தாமான் யூனிவர்சிட்டி (தாமான் யூ), அதிகமான இந்தியர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியாகும். 1980-களில் புவான் எங் தோட்டம் துண்டாடப்பட்டு, இப்பகுதி குடியிருப்பு மற்றும் வர்த்தக மையமாக வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தத் தோட்டத்தில் சுதந்திரத்திற்கு முன்பு, 1956-ல் இருந்து தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒன்று செயல்பட்டு வந்துள்ளதாக ஜொகூர் மாநிலத் தேசியக் காப்பகத்தின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1984-ம் ஆண்டு வரை, இப்பள்ளி செயல்பட்டதற்கான வரலாற்று குறிப்புகள் காணக்கிடக்கின்றன.

“இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இக்குடியிறுப்புப் பகுதியில், நமது அறிவு கருவூலமான தமிழ்ப்பள்ளியை இழந்தது மிகப்பெரிய பாதிப்பு,” என அந்நடவடிக்கைக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்ட  சந்திரமோகன் சிதம்பரம்  செம்பருத்தி.கோம்-இடம் தெரிவித்தார்.

சந்திரமோகன் சிதம்பரம்

“தற்போது, இங்குள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைக் கங்கார் பூலாய் மற்றும் தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளிகளுக்குக் கூடுதலான பேருந்து கட்டணம் செலுத்தி அனுப்புகின்றனர். ஒரே குடும்பத்தில் இரண்டு முன்று பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதாக இருந்தால், நடுத்தர ஏழை மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்,” என்று அவர் மேலும் சொன்னார்.

தாமான் யூ பகுதியில் தமிழ்ப்பள்ளி அமைக்க பல தன்னார்வக் குழுக்கள் முயற்சித்த போது, ம.இ.கா. தாமான் யூனிவர்சிட்டி தீமோர் கிளைத் தலைவர் திரு சிவநேசன், கட்சியின் செயற்குழு அதற்கான முயற்சியில் இறங்கி, நிலத்தை அடையாளம் கண்டுள்ளதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கூட்டம் ஒன்றில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

அப்போது அவர்களின் முயற்சிக்கு, வட்டார மக்கள் மற்றும் பொது அமைப்புகள் தீவிரமாக இறங்கி ஆதரவு கையெழுத்து இயக்கம் நடத்த துணையாக நின்றதாக ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மோகன் பெரியசாமி தெரிவித்தார்.

“ஆனால், இன்றுவரை அதன்செயல் வடிவில் எந்த வளர்ச்சியையும் இவ்வட்டார மக்கள் காணவில்லை. பல தடவை சந்திப்புக் கூட்டம் நடத்த கேட்டுக்கொண்ட போதும், 2 ஆண்டுகளாக மக்களுக்கான விளக்கக் கூட்டமோ அல்லது செயலவை கூட்டமோ நடத்தப்படவில்லை,” என்று மோகன் மேலும் கூறினார்.

“கட்சி பேதம் இன்றி அனைவரும் இம்முயற்சிக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தும், அதை முறையாக பயன்படுத்திக்கொள்ளாமல், இப்பள்ளிக்கான வேலை எந்த அளவுக்கு நடந்துள்ளது என்ற எந்த விளக்கத்தையும் கொடுக்க முன்வராதது வட்டார மக்களுக்கு இவர் மீது நம்பிக்கையை இழக்க செய்துள்ளது,” என்று ஜொகூர் மாநில ஹிண்ராஃப் இயக்கத் தலைவர் மோகன் எல்லப்பன் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழு செயலவையினர்

இன்றையக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் இவ்வட்டாரத்தில் தமிழ்ப்பள்ளி கோரும் ஒரு நடவடிக்கை குழு அமைத்து, அதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வட்டார மக்களின் கோரிக்கையாக ‘தாமான் யுனிவர்சிட்டியில் வேண்டும் ஒரு தமிழ்ப்பள்ளி’ என்ற முழக்கத்தை முன்வைக்க தாங்கள் எண்ணியுள்ளதாக சி. சந்திரமோகன் விளக்கினார்.

“எங்களின் நோக்கத்தை விளக்க விரும்பி, நாங்கள் வட்டாரத் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுத்திருந்தோம்.

“எங்களின் நியாயமான இக்கோரிக்கையை எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்கூடாய் சட்டமன்ற தொகுதியில் நிற்கும் அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் மனுவாக வழங்க திட்டமிட்டுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றையக் கூட்டத்தில், வட்டாரக் குடியிறுப்பாளர்களுடன் ஜொகூர் செம்பருத்தி தோழர்கள், ஹிண்ராஃப், மலேசியத் தமிழ்நெறி கழகத்தைச் சேர்ந்த திருமாறன், இ.சில்வராஜா (பி.எஸ்.எம்.), ஆ.சந்திர சேகரன் (டிஏபி), சு. ஜீவன் (அமானா) போன்ற வட்டார இயக்க, அரசியல் பொறுப்பாளர்கள் என சுமார் 35 பேர் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

-ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்