14 ஆவது பொதுத் தேர்தலில் மலாய் சுனாமி இருக்காது என்பதை உறுதிசெய்யுங்கள், நஜிப் கூறுகிறார்

 

14 ஆவது பொதுத் தேர்தலில் ஒரு மலாய் சுனாமியைத் தூண்டிவிடக் கூடாது என்று பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார், ஏனென்றால் அம்னோவும் பிஎன்னும் எப்போதும் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாத்து வந்துள்ளன.

ஒரு காலத்தில் டிஎபி போராடிய “மலேசியன் மலேசியா” திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மலாய்-பூமிபுத்ரா அமைப்புகளை உடைத்தெறிய எதிர்க்கட்சிகள் கிளம்பியுள்ளன என்றும் நஜிப் கூறிக்கொண்டார்.

அதனால்தான் 14 ஆவது பொதுத் தேர்தலில் மலாய் சுனாமி ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வது நமக்கு மிக முக்கியமானது. மலாய் சுனாமியைத் தூண்டிவிடுவதை பக்கத்தான் ஹரப்பான் செய்ய முயன்று கொண்டு இருக்கிறது என்று சுபாங் ஜெயாவில் இன்று சுமார் 5,000 மாரா மாணவர்களிடம் பேசுகையில் நஜிப் கூறினார்.

ஆகவே, அம்னோவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தைக் குறைகூறிக் கொண்டிருப்பவர்கள் கூறுவதற்கு செவிசாய்க்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அம்னோ அதிகாரத்தில் இருக்கும் வரையில் மாரா தொடர்ந்து இருக்கும். ஏனென்றால் மாராவுக்காகப் போராடியவர் எனது காலஞ்சென்ற தந்தை. நான் அவரது வேலையைத் தொடர்ந்து செய்வேன் என்று நஜிப் கூறினார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் மலாய் சுனாமி தாக்கப் போகிறது என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் பிஎன்னுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.