நூருல் இஸ்ஸா பெர்மாத்தாங் பாவில் போட்டியிடுவாராம்

எதிர்வரும்     14வது    பொதுத்    தேர்தலில்  பிகேஆர்   உதவித்    தலைவர்   நூருல்   இஸ்ஸா   அன்வார்   பெர்மாத்தாங்  பாவிலும்   அவரின்   தாயாரும்  பிகேஆர்   தலைவருமான   டாக்டர்     வான்  அசிசா    வான்  இஸ்மாயில்  கிள்ளான்  பள்ளத்தாக்கிலும்    போட்டியிடுவார்கள்.

ஆங்கில  நாளேடான   த   ஸ்டார்   கட்சித்    தலைமைச்   செயலாளர்   சைபுடின்  நசுத்தியோனை   மேற்கோள்காட்டி   இதைத்   தெரிவித்துள்ளது.

“அதன்  தொடர்பில்  விரைவில்   அறிவிப்பு   வரும்”,  என்றவர்   சொன்னார்.

கடந்த   டிசம்பரிலேயே  மலேசியாகினி,  நூருல்   இஸ்ஸா  பெர்மாத்தாங்   பாவிலும்   வான்  அசிசா   பாண்டானில்    அல்லது   பண்டார்   துன்   அப்துல்   ரசாக்கில்   போட்டியிடுவார்கள்   என்று   கூறியிருந்தது.

கட்சி   வட்டாரங்கள்  பல,   2013  பொதுத்   தேர்தலுக்குப்  பின்னர்   போலீஸ்  படையினர்  6598  பேர்    புதிய   வாக்காளர்களாக   லெம்பா    பந்தாய்  தொகுதிக்கு  மாற்றப்பட்டிருக்கிறார்கள்   என்பதால்  நூருல்  இஸ்ஸா   அங்கு  போட்டியிடுவார்  என்று   எதிர்பார்ப்பதற்கில்லை    என்று   மலேசியாகினியிடம்   தெரிவித்திருந்தன.

நூருல்  இஸ்ஸா  வேறு  தொகுதிக்கு  மாறிச்   சென்றால்    அந்தத்  தொகுதியில்    அவரின்  முன்னாள்   அரசியல்   செயலாளரான   பிகேஆரின்  தொடர்பு  இயக்குனர்   பாஹ்மி  பாட்சில்   களமிறக்கப்படலாம்.

நூருல்,  பாண்டானில்  போட்டியிடலாம்   என்றும்  ஒரு  வதந்தி   உண்டு.  அதன்  நடப்பு   எம்பி  ரபிசி  ரம்லி    பல  வழக்குகளை   எதிர்நோக்குவதால்   போட்டியிடமாட்டார்  என்று   எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால்,  அதை  “வெறும்  வதந்தி”   என்று   நூருல்  இஸ்ஸா  ஒதுக்கித்  தள்ளினார்.