ஜைட்- டுக்கு டிஏபிமீது அதிருப்தி?

பெரும்பாலும்  சீனர்களைக்  கொண்ட    டிஏபி  மலாய்க்காரர்களுக்கும்  இஸ்லாத்துக்குமுள்ள  சிறப்புரிமைகளை   எதிர்க்கும்  கட்சி     என்று கூறப்படுவதைப்  பொய்யாக்கும்   எண்ணத்துடன்   அக்கட்சியில்   சேர்ந்தவர்  ஜைட்   இப்ராகிம்.

2017  ஒரு  நேர்காணலில்   மலாய்   தீவிரவாதத்தை  எதிர்ப்பதுபோல்   டிஏபியில்  சீன  ஆதிக்கவாதம்  நிலவினால் அதையும்   எதிர்க்கப்போவதாகக்  கூறினார்  அந்த  முன்னாள்   சட்ட   அமைச்சர்.

ஆனால்,  இப்போது     எதிர்வரும்   தேர்தலில்   போட்டியிட   டிஏபி   அவருக்கு  இடமளிக்காததால்     அவர்    அக்கட்சிமீது   ஆத்திரமடைந்திருப்பதுபோல்    தோன்றுகிறது.

டிஏபி  அவருக்கு  இடம்  கொடுத்ததா   இல்லையா    என்பது   தெரியவில்லை  ஆனால்,  தமக்கு  ஓர்   இடம்   கொடுக்கப்பட்டால்    அது  ஏதோ  ஓர்   இடமாக  இருக்கக்  கூடாது    அரசியல்  முக்கியத்துவமுள்ள   இடமாக  இருக்க   வேண்டும்  என்றவர்  ஏற்கனவே     வலியுறுத்தியிருந்தார்.

அண்மையில்    வந்துள்ள  அவரது   டிவிட்டுகளைப்  பார்க்கையில்    அவர்   டிஏபிமீது   அதிருப்தியுற்றிருப்பதுபோல்தான்   தெரிகிறது.

இன்று  காலை   டிவிட்டர்   பதிவில்   டிஏபியை  “பிஎச் (பக்கத்தான்  ஹரப்பான்) -இல்  இள்ள  ஒரு  சீனக்  கட்சி”  என்று  குறிப்பிட்டிருந்தார்.

டிஏபி   என்று  பெயர்  குறிப்பிடாமலேயே,  அது   இரண்டு  அமைச்சர்களின்  பெயர்களை   அறிவித்துள்ளது  என்றவர்   கூறினார்.

“மேலும்  பலர்   அறிவிக்கப்படலாம்.  இந்த  விசயத்தில்   மலாய்க்  கட்சிகள்    மெளனம்  காக்கின்றன.  மலாய்க்  கட்சிகள்   அப்படித்தான்  கருத்துகள்   சொல்லக்  கூச்சப்படும்,  தயக்கம்  காட்டும். கொஞ்சம்கூட   மாறவில்லை”,  என்றார்.

நேற்று   டிஏபி   தலைமைச்  செயலாளர்   லிம்  குவான்   எங்   பக்கத்தான்  ஹரப்பான்   தேர்தலில்   வெற்றி   பெற்றால்   பேராக்  டிஏபி   தலைவர்   ங்கா  கொர்  மிங்,  அமைச்சராக  நியமனம்  செய்யப்படுவார்   என்று   அறிவித்திருந்தார்.

இங்காவை   தெலோக்   இந்தான்   நாடாளுமன்றத்   தொகுதி    வேட்பாளராக   அறிவித்தபோது  லிம்   அவ்வாறு   கூறினார்.

அதற்குமுன்பே  ஜோகூர்  டிஏபி   தலைவர்   லியு  சின்    தொங்   வெற்றி  பெற்றால்  அவரும்  அமைச்சராக்கப்படுவார்   என்றும்  லிம்   வாக்குறுதி   அளித்திருந்தார். –