அம்னோவும் பாரிசானும் மக்களைத் திட்டி, மிரட்டி, ஏமாற்றி வாக்குகளை வாங்க முடியாது, சேவியர்

 

 

மலேசியாவின் 60 ஆண்டுக் கால வரலாற்றில் பல முன்னேற்றங்களை நாடு அடைந்திருந்தாலும் வளர்ச்சியில் கைவிடப்பட்ட இனமாக, ஏற்றத்தில் ஓரங்கட்டப்பட்டப் பிரிவாக இந்தியர்கள் உள்ளனர் என்றால் அது மிகையாகாது என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

ஆக, அதனைச் சரி செய்ய, நமது நிலைமையை மேம்படுத்திக் கொள்ளத் தடங்களாக, தடையாக, உள்ள அரசாங்கக் கொள்கைகளை உடைத்தெறிய ஒரு வாய்ப்பாக ஒவ்வொரு தேர்தலையும் மக்களும் நாமும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் வாய்ப்புகளைக் கைவிட்டால் இழப்பு நமக்கே என்பதை நாம் உணர வேண்டும்.

 

நம் நாட்டு அரசின் கொள்கைகளின் அமுலாக்கம் தேர்தலுக்குத் தேர்தல் மாறுபட்டிருந்ததையும், 2008ம் ஆண்டுக்குப் பின் மேலும் பல மாற்றங்களைக் கண்டுள்ளதை மக்கள் உணர்ந்திருக்கலாம்! இது குறித்து விரிவாக விவாதிக்கவும், நீண்ட பட்டியலை வெளியிடவும் முடியும், உதாரணமாகத் தமிழ்ப்பள்ளிக்கு அனுமதி மற்றும் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பை மட்டும் எடுத்துக் கொண்டாலும் இது விளங்கும்.

 

ஒரு காலத்தில் வெற்று மகஜராக இருந்த இந்தியர்களின் கோரிக்கைகள் 2008 ம் ஆண்டுக்குப் பின் அரசியல் நிர்ப்பந்தமாக அரசாங்கத்திற்கு உருவெடுத்தது எப்படி? சிலாங்கூர், பினாங்கு, கெடா, பேரா போன்ற  இந்தியர்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் ஆட்சியை மாற்றக்கூடிய வல்லமையுடையது இந்தியர்களின் ஓட்டு என்பதைப் பாரிசான் அரசுக்கு உணர்த்தினோம் என்றார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

தமிழ்ப்பள்ளிக்கு நிலத்தை வழங்கித் தமிழர்களைக் கொண்டு அதன் கட்டடத்தைக் கட்டி, புதிய கட்டடத்தில் குடியேற்றும் அதிகாரத்தை மாநில அரசின் வழி தமிழர்கள் ஷா ஆலாம்  மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியில் நடத்திக் காட்டினர். நமது அடுத்த கோரிக்கையாக கிள்ளான் செந்தோசாவில், சிம்பாங் லீமாவில் 2 தமிழ்ப்பள்ளி செயல்பட அனுமதியை மட்டுமே கோரினோம்.

 

மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளி வழி, பாரிசான் அரசின் அதிகாரம், ஆளுமை கேள்விக்குறியாகி விட்ட நிலையில், 2013 ம் ஆண்டு தேர்தலில் இந்தியர்களின் ஓட்டுகளைப் பெறப் பிரதமர் நஜிப் வழங்கிய வாக்குறுதிப்படி தனியார் அறநிறுவனங்கள் வழங்கிய 27 மில்லியன் வெள்ளியில் இந்த தேர்தலுக்கு செந்தோசா தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டுள்ளது. ஆக, சுதந்திரத்துக்குப் பின் குறைந்து கொண்டே வந்த தமிழ்ப்பள்ளி எண்ணிக்கை ஏற்றம் காண்பதாக மஇகா கூறிக்கொள்கிறது.

 

அதே போன்று நமக்கும் நாட்டுக்கும் சவாலாகவுள்ள பல விவகாரங்கள் மீது அவசரத் தீர்வு காண வேண்டிய அவசியம் நாம் அனைவருக்கும் உண்டு, அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்குடன் 14 ஆவது பொதுத் தேர்தல் வாக்குறுதிகளாக 60 வாக்குறுதிகளையும், இந்தியர்களின் இன்னல்களைத் தீர்க்க 25 வாக்குறுதிகளையும் பக்காத்தான் ஹராப்பான் முன்வைத்துள்ளது.

 

போலியான மகாதிர் அமைச்சரவை பட்டியல்

 

ஆனால், நமது தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத, பாரிசான் அம்னோ தனக்குச் சொந்தமான பத்திரிகையின் வழி, பக்காத்தானின் அமைச்சரவை எனப் போலியான பட்டியலைத் தோற்றுவித்து, அதில் ஜ.செ காவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை துணைப் பிரதமராக, கோபிந் சிங் மற்றும் என்னை மட்டும் இந்திய அமைச்சர்கள் என காட்டி இந்திய, மலாய் இன மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தவும் முற்பட்டுள்ளது.

 

அதே பட்டியலில்,  ஒரு சட்டமன்ற உறுப்பினரான ஹனா யோவை, தேர்தலில் போட்டியிடாத டத்தோ சைட் இப்ராஹிம், டத்தோ காடிர் ஜாசின் மற்றும் நீதிமன்றக் குற்றச்சாட்டுகளைச் சுமந்துள்ள பிகேஆர் தியேன் சுவா மற்றும் ரபிசி ஆகியோரை அமைச்சர்களாகப் பட்டியலிட்டுத் துன் மகாதீருக்கும், பக்காத்தான் ஹராப்பானுக்கும் ஏதிராக வாக்காளர்களைத் திசை திருப்பத் திருகுதாளமிட்டு வருகிறது.

 

தேர்தல் எல்லை சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் என இறுதி நேர குளறுபடிகள், பொய்ச் செய்தி மசோதா என்று அடுக்கடுக்கான அநீதிகளை அம்னோ பாரிசான்  இந்நாட்டு மக்களுக்கு இழைத்து வருவதுடன் இனத் துவேஷம் செய்தும் மக்களை மிரட்டியும் ஓட்டு வாங்க மனப்பால் குடிக்கிறது.

 

கேவலமான வார்த்தைகளால் இந்தியர்ளை வர்ணித்து, திட்டி அவமதித்து வரும் சுங்கை புசார் அம்னோ டிவிசன் தலைவர் ஜமால் யூனுஸ்சின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆனால், பாரிசானின் சட்டங்கள் அவர் மீது பாய்வதில்லை. அம்னோ அவரைப் பாதுகாக்கலாம், ஆனால் மக்கள் அதற்கான தண்டனையை அம்னோ பாரிசானுக்கு வழங்கச் சித்தமாகவுள்ளனர் என டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.