தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு பெட்டாலிங் ஜெயாவில் எட்டு ஏக்கர் நிலம்! – சிலாங்கூர் மாநில அரசின் சாதனை!    

மலேசியாவின் முதலாவது இடைநிலைப்பள்ளி அமைவதற்கான நிலத்தை பெட்டாலிங்ஜெயா மாநகராட்சி மன்றம் ஒதுக்கி உள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அமைகிறது. இதுநாள் வரையில் தமிழ்ப்பள்ளிக்கே நிலம் இல்லாமல் அலைந்த வேளையில், இந்த புதிய மாற்றம், அரசியல் மாற்றங்களுக்கு ஓர் இலக்கணமாக தோன்றுகிறது.

கடந்த வருடம் தொட்டே இதற்கான ஏற்பாடுகளை செய்ததாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் உறுப்பினர் சுரேஷ் கெங்கையா செம்பருத்தியிடம் தெரிவித்தார்.

சுங்கைப்பூலோ அருகில் உள்ள ஆர்.ஆர்.ஐ. தோட்டம் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதில் இந்தியர்களுக்கான சமயம், கல்வி மற்றும் இடுகாடு போன்றவைகளுக்கான நில ஒதுக்கீட்டுகாக பெட்டாலிங்ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், டேரிக் ஜான் பெர்னன்டஸ் மற்றும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா ஆகியோர் தீவிரமாக செயல்பட்டதாக அறியப்படுகிறது.

இதுபற்றி மேலும் விவரிக்கையில், “இடைநிலை தமிழ்ப்பள்ளிக்கு எட்டு ஏக்கர் நிலமும் அதன் அருகாமையில் ஆரம்பத் தமிழ்ப்பள்ளிக்கு ஆறு ஏக்கர் நிலமும் மற்றும் இந்தியர்களின் இடுகாட்டிற்கு இருபத்தொரு ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது”. என்கிறார் சுரேஷ்.

பெட்டாலிங்ஜெயா மாநகர் மன்றம் இந்த ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அதோடு மாநகர் மன்றத்தின் கூட்டக்குறிப்பில் இந்த ஒப்புதல் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுரேஷ் கூறினார்.

இவை சார்ந்த அனைத்து தகவல்களும் மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவேட்டின் பதிவுக்காக அனுப்பப்படுள்ளதாக அவர் மேலும் கூறினார். மேலும் மாற்றம் கண்டு வரும் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் நமது சுயநிர்ணய தேவைகளூக்கு நாம் தொடந்து செயல்பட அதற்கு ஏற்புடைய அரசியல் சூழல் அத்தியாவசியமாகிறது என்கிறார் சுரேஷ்..