அவதூறு வழக்கில், நூருல் இஸ்ஸா RM1 மில்லியன் வெற்றி

‘சூலு இளவரசி’ ஜெசல் கிரெம்-ஐ சந்தித்தார் என்று குற்றம் சுமத்திய அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் முன்னாள் போலிஸ்படைத் தலைவர் காலித் அபு பக்கார் இருவருக்கும் எதிரான அவதூறு வழக்கில், பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் வெற்றி பெற்றார்.

இன்று, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், இஸ்மாயில் மற்றும் காலித் இருவரும் முறையே RM600,000 மற்றும் RM400,000 தொகையை, அந்த லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.

நீதிமன்ற ஆணையர் ஃபைஷா ஜமாலுட்டின், அவர்களை மேலும் செலவு கட்டணமாக RM80,000-ஐ செலுத்தவும் உத்தரவிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பு பற்றி கருத்துத் தெரிவிக்கையில், 2013-ஆம் ஆண்டில் லஹாட் டாத்து ஊடுருவல் சம்பவத்தில் கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், அந்தத் தொகையை அனுப்பவுள்ளதாக நூருல் இஸ்ஸா கூறினார்.

“அவர்கள் எனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள் (ஒரு துரோகி எனச் சித்தரிக்கப்பட்டு), ஆனால் நான் தேசபக்தி கொண்டவள்,” என்று அவர் கூறினார்.