14 ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்றால், சீனாவிடமிருந்து பெற்ற கடன்கள் மற்றும் முதலீடுகள் மறுபரீலனைக்கு உட்படுத்தப்படும் என்று ஹரப்பான் தலைவர் வாக்குறுதி அளித்தார் என்று எசோசியேட்டட் பிரஸ் (எபி) செய்தி கூறுகிறது.
மலேசியா பெரும் கடன்களை சீனாவிடமிருந்து பெற்றுள்ளது. அதைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் போகலாம் என்று கடந்த புதன்கிழமை அவர் ஒரு நேர்காணலில் கூறினார்.
கடன் பிடியிலிருந்து விடுபட சிறீ லங்கா அதன் ஹம்பான்தோதா துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவுக்கு கொடுத்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
சீனாவுடனான கடன்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்து அவற்றை தொடர்வதா, தாமதப்படுத்துவதா அல்லது மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதா என்பது பற்றி பரிசீலிப்போம் என்று மகாதிர் கூறினார்.
சீனா 33 உள்ளூர் உற்பத்தித் திட்டங்களில் ரிம4.77 பில்லியனையும் 22 சொத்துடமைத் திட்டங்களிலும் மொத்தம் ரிம581.2 பில்லியனையும் முதலீடு செய்திருப்பதாக கடந்த பெப்ரவரில் கூறப்பட்டது.
இந்தப் பெருமளவிலான அந்நிய முதலீடுகள் நாட்டின் இறையாண்மைக்கு மறுட்டலாக இருக்கும் என்பதை புத்ராஜெயா மீண்டும் மீண்டும் மறுத்து வந்துள்ளது.
இதனிடையே, பெருகி வரும் கிராமப்புற மலாய்க்காரர்களின் ஆதரவோடு புத்ராஜெயாவைக் கைப்பற்றும் நம்பிக்கை இருப்பதாக மகாதிர் மீண்டும் கூறினார்.
ஒவ்வொரு அரசாங்க ஆதரவாளர்களும் மனம் மாற வேண்டும் என்ற தேவை இல்லை என்று கூறிய மகாதிர், அவர்களில் 30 விழுக்காட்டினர் மாறினால் போதும். அது நாங்கள் வெற்றி பெறுவதற்குப் போதும் என்றார்.
அலை இருக்கிறது – அது சுனாமியோ இல்லையோ – கிராமப்புற மலாய்க்காரர்களிடையே நிச்சயமாக மன மாற்றம் இருக்கிறது என்று மகாதிர் மேலும் கூறினார்.