கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டியதைத் தாமதித்தால் அம்னோ அதன் சட்டவிதிகளை மீறி விட்டதா என்பதற்கான நீதிமன்ற பிரகடனம் ஒன்றை அம்னோ உச்சமன்றம் பெற வேண்டும் என்று ராயிஸ் யாத்திம் அம்மன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நீதிமன்ற பிரகடனத்தைப் பெற முயல்வாரா என்று வினவிய போது ரயிஸ் யாத்திம் இவ்வாறு கூறினார்.
“அதைச் செய்வது என் வேலையல்ல. ஆனால், அதைச் செய்வதற்கு தகுதி பெற்றது (அம்னோ) உச்சமன்றம்.
“அம்னோ உச்சநிலை தலைவர்கள் மௌனமாக இருக்க முடியாது. அவர்கள் துல்லியமான சட்ட வழிகாட்டல் பெற வேண்டும். அவர்கள் இதைச் செய்யாவிட்டால், அவர்கள் கட்சியின் சட்டவிதி பிரச்சனையைக் கடுமையானதாகக் கருதவில்லை என்றாகும்”, என்று ரயிஸ் மலேசியாகினியிடம் கூறினார்.
அம்னோ அதன் தேர்தல்களை இன்று, ஏப்ரல் 19 இல், நடத்த வேண்டும் என்பது தெளிவானதாகும் என்று ரயிஸ் மேலும் கூறினார்.
அம்னோ அதன் கடைசி கட்சித் தேர்தல்களை அக்டோபர் 19, 2013 இல் நடத்தியது.
அம்னோவின் சட்டவிதி 9.3 இன் கீழ் கட்சித் தேர்தல் ஒவ்வொரு மூன்றாண்டும் நடத்தப்பட வேண்டும். ஆனால், அது 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதை விதி 10.6 அனுமதிக்கிறது.
அம்னோ பொதுத் தேர்தலுக்கு தயார் செய்ய வேண்டியிருப்பதால் கட்சித் தேர்தல்கள் தள்ளிப்போடப்படும் என்று நஜிப் ஜூன் 2015 இல் அறிவித்திருந்தார்.
இந்த நீட்டிப்பு அனுமதிக்கப்படுகிறது என்று கூறிய ரயிஸ், இரண்டாவது நீட்டிப்புக்கு சாத்தியமில்லை என்று வாதிட்டார்.
“விதி 10 இன் கீழ் கூறியிருப்பது போல் தேர்தல் நடத்தாமல் அம்னோ பதிவு செய்யப்பட்டதாக வைத்திருக்கும் அதிகாரம் மன்றங்கள் பதிவாளருக்குக் கிடையாது.
“இது முக்கியமானதாகும் ஏனென்றால் பொதுத் தேர்தல் வருகிறது. அதனால் அம்னோ நீதிமன்ற பிரகடனத்தைப் பெறுவது நல்லது, ஏனென்றால் அதை மற்றவர்கள் செய்தால், தலையீட்டுரிமை பற்றிய பிரச்சனை எழும்.
“நீதிமன்றத்தின் பிரகடனத்தைப் பெற்றல் அம்னோ அதன் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இல்லையேல், அதிகமான உறுப்பினர்கள் அம்னோவின் சட்டப்பூர்வ நிலை பற்றி கேள்வி எழுப்புவார்கள்.
“சாதாரண உறுப்பினர்கள் இதைச் செய்தால், அது நல்லதாகத் தெரியாது.
“பதிவாளருக்கு {ரோஸ்) கட்சித் தேர்தலை மேலும் தாமதப்படுத்துவதற்கு அனுமதிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பது பற்றி உச்சமன்ற உறுப்பினர்கள் சட்ட விளக்கம் பெற வேண்டும்.
“ஆனால் சட்டவிதியைப் பார்க்கும் போது, இது சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் பதிவாளர் ஒரே முறை மட்டுமே நீட்டிப்பை அளிக்க முடியும்”, என்று ரயிஸ் கூறினார்.
கடந்த பெப்ரவரியில் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கட்சி தேர்தல் ரோஸின் ஒப்பபுதலைப் பெற்ற பின்னர் ஏப்ரல் 19 இல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோ போட்டியிட முடியாது ஏனென்றால் அது ஏப்ரல் 19 கிற்குப் பின்னர் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் என்று அவரது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
இன்னொரு நீட்டிப்பை அளிக்கும் அதிகாரம் ரோஸ் பதிவாளருக்கு இல்லை என்றும் ரபிடா அசிஸ் கூறியுள்ளார்.
ஆனால், நேற்று தெங்கு அட்னான் அம்னோ ஒரு சட்டவிரோதமான கட்சி அல்லவென்றும் அது 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று கட்சி உறுப்பினர்கள்க்கு உறுதி அளித்தார்.