14வது பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரம் இருக்கையில் அம்னோ உறுப்பினர்கள் 16பேர் கட்சித் தேர்தலை நடத்தாத அம்னோ சட்டப்பூர்வமான ஒரு கட்சிதானா என்று கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர்.
கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக மலேசியாகினிக்குத் தெரிய வந்துள்ளது.
அம்னோ உறுப்பினர்களை மூத்த வழக்குரைஞர் முகம்மட் ஹனிப் கத்ரி அப்துல்லாவும் முன்னாள் அம்னோ எம்பி ஜைட் இப்ராகிமும் பிரதிநிதிக்கின்றனர்.
முகம்மட் ஹனிப், அம்னோ முன்னாள் தலைவரும் பக்கத்தான் ஹரப்பானின் இந்நாள் தலைவருமான மகாதிர் முகம்மட்டுக்காக பல வழக்குகளை முன்னின்று நடத்தியுள்ளார்.
முன்னதாக முகம்மட் ஹனிப் ஒரு வலைப்பதிவில் அம்னோ கட்சியின் மூத்த உறுப்பினர் ரயிஸ் யாத்திமின் ஆலோசனைப்படி அம்னோ அது “சட்டப்பூர்வமான கட்சிதான்” என்பதற்கு நீதிமன்ற பிரகடனமொன்றைப் பெறுவது நல்லது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, ஜைட் இப்ராகிம் மலேசியாகினியிடம் பேசியபோது அம்னோ ஒரு சட்டப்பூர்வ கட்சி அல்ல என்ற எண்ணம் தமக்கும் இருப்பதாகத் தெரிவித்தார்.
“அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. இதைத் தீர்மானிக்க வேண்டியது சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்)தான் ”, என்றார்.