முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிமுக்கு டிஏபிமீது அதிருப்தி. பொதுத் தேர்தலில் போட்டியிட தமக்கு இடமளிக்கப்படவில்லை என்பதற்காக அல்ல. டிஏபி நடந்துகொள்ளும் முறை அவருக்குப் பிடிக்கவில்லை.
2017 பிப்ரவரியில் டிஏபியில் சேர்ந்த ஜைட் 12 மாதங்களுக்கு முன்பு லிம் கிட் சியாங் எம்பியாக உள்ள கேளாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியைத் தமக்குக் கொடுக்க முன்வந்தார்கள் என்றார்.
“அதைக் கேட்டு மனம் துள்ளியது. அது நகர்ப்புற தொகுதி… எனக்கு அப்படிப்பட்ட தொகுதிதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
“ஆனால், மூன்று மாதங்களுக்குப் பின் கொடுக்கப்பட்டது எடுத்துக்கொள்ளப்பட்டது”.
அதனை அடுத்து பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டிபோட விருப்பமா என்று கேட்கப்பட்டது.
பெந்தோங் மசீச தலைவர் லியோ தியோங் லாய் தொகுதி. 2013 பொதுத் தேர்தலில் 379 வாக்குகள் வேறுபாட்டில்தான் அவர் அங்கு வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால், ஜைட் அங்கு போட்டிபோட விரும்பவில்லை.
“அது எனக்குப் பொருத்தமில்லாத தொகுதி. பெருந் தலைகளை வீழ்த்தும் சக்தி எனக்கில்லை. அதற்கான வசதி என்னிடம் இல்லை. கடந்த எட்டாண்டுகளாக வேலையில்லாதிருக்கிறேன்”, என்றார்.
அதன் பின்னர் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பற்றியோ இடம் ஒதுக்கப்படுவது பற்றியோ பேச்சே இல்லை.
“நானும் கட்சிப் பணிகளில் அவ்வளவாக ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தேன்.
“இவ்வாண்டு மார்ச் 27-இல் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்குக் குறுஞ் செய்தி அனுப்பி நான் போட்டியிட இடம் ஒதுக்கப்படுகிறதா என்று கேட்டேன். மரியாதைக்காக ஒரு பதில்கூட இல்லை.
“ இடம் கிடைக்கவில்லையே என்பதை நான் பெரிதாக நினைக்கவில்லை. அவர்களின் போக்கு, அதுதான் பிடிக்கவில்லை”, என்றார்.