வேட்பாளர்கள் நியமனக் கடிதங்களில் நஜிப் கையொப்பமிட முடியாது

 

அம்னோ சட்டப்பூர்வமானதா என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில், அம்னோ மற்றும் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோ மற்றும் பிஎன் வேட்பாளர்கள் நியமனக் கடிதங்களில் கையொப்பமிட முடியாது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையில் அம்னோ கட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு மன்றங்கள் பதிவகத்தின் (ரோஸ்) பதிவாளர் எடுத்துள்ள முடிவை மறுஆய்வு செய்யக் கோரும் 16 அம்னோ உறுப்பினர்களின் மனுவை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பின்னர் அவர்களின் வழக்குரைஞர் முகமட் ஹனிப் காத்ரி அப்துல்லா இவ்வாறு கூறினார்.

அம்னோவின் உச்சமன்றம் மற்றும் தொகுதிகள் ஆகியவை இன்றுடன் காலாவதியாகி விட்டன. அம்னோவின் கிளைகள் மார்ச் 1 லிருந்து காலாவதியாகி விட்டன.

ஆகவே, நஜிப் வேட்பாளர்கள் நியமனக் கடிதத்தில் கையொப்பமிட முடியாது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மறுஆய்வு மனு தாக்கல் செய்த வாதிகளில் ஒருவரான கம்போங் பாண்டான் அம்னோ கிளைத் தலைவர் ஷாலிகுடின் அஹமட் காலிட் அம்னோவின் தகுதி குறித்து ரோஸுக்கு கடிதம் அனுப்பியதாகவும் இதுவரையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

2013 ஆம் ஆண்டிலிருந்து தாம் கிளைத் தலைவராக இருந்து வருவதாக கூறிய அவர், கிளைகளின் தேர்தல் நடத்தப்படாததால் தம்முடைய நிலை சட்டப்பூர்வமானதா என்று அவர் வினவினார். மேலும், கிளைத் தேர்தல் பெப்ரவரி 28 இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றாரவர்.