பதிவு செய்யப்படாமலேயே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதைக் கண்டவர்கள் முன்னேரத்திலேயே சென்று வாக்களித்து விட வேண்டும். அவர்களின் பெயரில் மற்றவர்கள் வாக்களிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அவ்வாறு செய்வது அவசியம் என்கிறார் சமூக ஆர்வலர் மரினா மகாதிர்.
“பலர் பதிவு செய்யவில்லை ஆனால், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
“அப்படி இருந்தால் உங்கள் பெயரில் வேறு யாரோ வாக்களிக்கும் சாத்தியம் உள்ளது.
“அந்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முன்னேரத்திலேயே சென்று வாக்களித்து விடுங்கள். அப்போதுதான் மற்றவர்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது போகும்”, என நேற்றிரவு ஒரு கருத்தரங்கில் மரினா கூறினார்.
வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
எண்ணிக்கை குறைவாக இருந்தால் மர்மமான முறையில் வாக்குகள் வந்து சேரும். அதனால் வாக்களிக்கத் தகுதி உள்ள அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்றார்.
“நண்பர்கள், அண்டைவீட்டார்களிடமும் வாக்களிக்குமாறு வலியுறுத்த வேண்டும்”.
மரினா கூறியதைப் பிரபல வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான அம்பிகா ஸ்ரீநிவாசனும் ஒப்புக்கொண்டார்.
“எண்ணிக்கை அதிகமாக இருத்தல் வேண்டும். கடந்த முறை 80 விழுக்காட்டினர் வாக்களித்தனர். இப்போது அதை 90 விழுக்காட்டுக்குக் கொண்டு செல்வோம்”, என்றாரவர்.
ஜாலோர் கெமிலாங் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த அக்கருத்தரங்கில் மரினா, அம்பிகா, சட்ட விரிவுரையாளர் அஸ்மி ஷாரோம், நடப்பு சுங்கை சிப்புட் எம்பி டி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.