முன்னாள் மலேசிய கம்முனிஸ்டுக் கட்சி(சிபிஎம்)த் தலைவர் ஷம்சியா பாகேயின் பேத்தி ஜமாலியா ஜமாலுடினை சிலாங்கூர் பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதியில் டிஏபி அதன் வேட்பாளராகக் களமிறக்குகிறது.
பண்டார் உத்தாமா தொகுதி முன்பு டமன்சாரா உத்தாமா என்ற பெயரில் விளங்கியது. அதன் நடப்பு பிரதிநிதி இயோ பீ இன், வரும் பொதுத் தேர்தலில் ஜோகூரில் பக்ரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாட்டி சிபிஎம்-இல் இருந்தது தன் வெற்றிக்குத் தடங்கலாக இருக்கும் என்று கூறப்படுவதை ஜமாலியா மறுத்தார்.
“இல்லை. அது ஒரு சுமை அல்ல. அவரை நாட்டுக்காக போராடியவராகவும் நிறைய தியாகங்கள் செய்தவராகவும்தான் நான் பார்க்கிறேன். அவரே எனக்கு வழிகாட்டி, ஊக்கமளிப்பவர்”, என்றாரவர்.
டிஏபியைத் தேர்ந்தெடுத்ததற்கு அதன் கொள்கைகள்தாம் காரணம் என்று ஜமாலியா குறிப்பிட்டார்.
“ அதன் ‘மலேசியன் மலேசியா’ கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும். அது குறித்து வெறுமனே பேசிக்கொண்டிருக்கவில்லை, ஒரு நாளில் அது அடையப்படும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எங்களுக்கு உண்டு”, என்றாரவர்.