சிலாங்கூரைப் போன்றே பினாங்கு பிகேஆர் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பிலும் சிக்கல்கள் நிலவுவதாக தோன்றுகிறது.
நேற்று பெர்மாத்தாங் பாவில், பிகேஆர் உயர்தலைவர்கள்- தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைத் தலைவர் அஸ்மின் அலி, அத்தொகுதியின் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்படும் நூருல் இஸ்ஸா அன்வார் முதலானோர்- குழுமியிருந்த நிகழ்வில் ஜிஇ14 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற ஆவலுடன் பிகேஆர் ஆதரவாளர்கள் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.
ஆனால், எதிர்பார்த்தபடி அது அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தலைவர்களுக்கிடையில் இன்னும் ஓர் உடன்பாடு காணப்படவில்லை என்று தெரிகிறது. இன்றிரவுக்குள் அதை இறுதி செய்தாக வேண்டும்.
பிகேஆர் ஜிஇ14-இல் பினாங்கில், 14 இடங்களில் போட்டியிடுகிறது. இது கடந்த தேர்தலைவிட இரண்டு இடங்கள் குறைவு. டிஏபி 19 இடங்களிலும் அமனா மூன்று இடங்களிலும் பெர்சத்து 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
பிகேஆர் வேட்பாளர் பட்டியலிலிருந்து அஸ்மின் ஆதரவாளர்கள் கழட்டிவிடப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் சில தெரிவித்தன.
வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில் ரபிசி ரம்லி, நூருல் ஆகியோருடன் சேர்ந்துகொண்டுள்ள பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் பேச்சுத்தான் எடுபடுகிறது என்று ஒரு வட்டாரம் கூறியது.
மலேசியாகினி கையில் ஒரு பட்டியல் கிடைத்தது. அது குறித்து சைபுடினிடம் கருத்துக் கேட்டதற்கு சரியான பட்டியல் இனிமேல்தான் வரும், அதுவரை காத்திருக்குமாறு கூறிவிட்டார்.
மேலும் வேட்பாளர்களுக்கான ஒப்புதல் கடிதத்தில் அசிசாவின் கையொப்பம் பெறுவதற்காக அவரைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எல்லாத் தரப்புகளையும் அவர் கேட்டுக்கொண்டார். வேட்பாளர் ஒப்புதல் கடிதங்கள் கையெழுத்திடப்பட்ட பின்னர் அதிகாரத்துவ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
வேட்பாளர் பட்டியல் குறித்து வதந்திகள் பலமாக அடிபடுகின்றன. இப்போது பிகேஆர் பிரதிநிதிகளாக உள்ள சிலருக்கு- மநில ஆட்சிக்குழுவில் உள்ள இருவர் உள்பட- பட்டியலில் இடமில்லையாம்.
அது குறித்து மாநில பிகேஆர் தலைவர் மன்சூர் ஒத்மானைக் கேட்டதற்கு, அவர் சிரித்துக்கொண்டே “எல்லாம் நாளை தெரிந்து விடும்”, என்றார்.
நிபோங் தெபாலில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் மன்சூர், அனேகமாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பினாங்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்றார்.