தொலைக்காட்சி கலைஞரான அஸ்வான் அலி தன் அண்ணனும் சிலாங்கூர் பராமரிப்பு மந்திரி புசாருமான அஸ்மின் அலிக்கு எதிராக புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். அவர் “யானை”யைத் தன்னுடைய தேர்தல் சின்னமாக தேர்ந்தெடுத்துள்ளார்.
“நான் யானைச் சின்னத்தைப் பயன்படுத்துவேன் என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
“ஒரு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவேன். ஏன்?
“ஏனென்றால் அஸ்மினின் பொய் வாக்குறுதிகளைக் கேட்டுக் கேட்டு புக்கிட் அந்தாராபங்சா மக்களுக்கு அலுத்துப் போய்விட்டது”, என சினார் ஹரியானிடம் அவர் தெரிவித்தார்.
ஒரு கேள்விக்குப் பதிலளித்த அவர், ஒரு வாக்கு கிடைத்தால்கூட கவலையில்லை என்றார்.
“அதையே பெரிதாக நினைப்பேன். என் வைப்புத்தொகை போனால் போகட்டும். அது என் பணம். உங்கள் பணமல்ல”, என்று கூறினார்.
அஸ்வான் கடந்த வாரம் அவர் போட்டியிடுவது ஏனென்று விளக்கியபோது தன் அண்ணனின் பாவச் செயல்களை அம்பலப்படுத்தப் போவதாகக் கூறினார்.
“அஸ்மினை அம்மணமாக்கி நிறுத்தப் போகிறேன். அவரின் பாவச் செயல்களை நான் அறிவேன். அதுதான் என் தேர்தல் அறிக்கை.
“அவரை ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்காகத்தான் போட்டியிடுகிறேன். அவர் ஒரு கபடதாரி, தரக்குறைவானவர்.
“சிலாங்கூர் மக்கள் தொடர்ந்து ஏமாற விட மாட்டேன்”, என்றார்.