14-ம் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால், மே 10, 11-ம் தேதிகளில் பொது விடுமுறை வழங்கப்படும் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர், துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார்.
“எனக்கு விடுமுறையில் விருப்பம் இல்லை, ஆனால் பலர் அதனை விரும்புகிறார்கள். ஆனால், இந்த முறை, ‘இனி காலி’ மட்டும்தான்,” என்று அந்த முன்னாள் பிரதமர், பெட்டாலிங் ஜெயாவில் ஹராப்பான் வேட்பாளர்களுக்கான விளக்கக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.
வாக்களிக்கும் நாளான மே 9, புதன்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள வேளை, புத்ரா ஜெயாவை ஹராப்பான் கைப்பற்றினால், மலேசியர்கள் ஒரு நீண்ட ஓய்வெடுக்க ஏதுவாக இந்த 5 நாள்கள் விடுமுறை அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனையை, முதன்முறையாக அமானா கட்சியின் வியூக இயக்குநர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் வழங்கியிருந்தார்.
வாக்களிக்க ஊர் திரும்பும் மக்களுக்கு ஊக்குவிப்பாகவும் ‘மக்கள் வெற்றி’யைக் கொண்டாட ஏதுவாகவும் இருக்கும் என்பதால், இந்தக் கூடுதல் விடுமுறை ஆலோசனை வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
வாக்குப்பதிவு நாளாக வேலை நாள் தீர்மானிக்கப்பட்டதால், வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது கடினம் என்று கூறி எதிர்தரப்பினரிடமிருந்து பல விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 11-ல், யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மது V, பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டுமெனக் கோரி, 100,000 க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் பிச்சார மனுவில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் மே 9-ம் தேதியைப் பொது விடுமுறையாக அறிவித்தது.