‘மக்கள் தயாராகி விட்டார்கள் மாற்றத்துக்கு, அரசியல்வாதிகள் வந்து விட்டார்கள் அதைக் கெடுப்பதற்கு’
நல்ல நாளாக அமையட்டும்: பிகேஆரைக் கண்டித்துள்ள தேசிய மனித உரிமைக் கழக(ஹகாம்)த் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனுக்கு நன்றி.
பிகேஆர் தெளிவு பெற்றுத் திருந்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
முடிவுக்கு வரமுடியாதவன்: “தடங்கல்களைக் கடந்து தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் எல்லா வகை முயற்சிகளையும் செய்து வரும் வேளையில் பிகேஆரில் இப்படி ஒரு பூசல் நிலவுவதைப் பொறுப்பதற்கில்லை” .
சரியாகச் சொன்னீர்கள் அம்பிகா. இடத்துக்காக அடித்துக்கொள்வது பிகேஆர் மீதுள்ள நம்பிக்கையை ஆட்டம்காண வைக்கிறது.
சர்ச்சைக்குக் காரணம் துணைத் தலைவர் அஸ்மின் அலிதான் என்று பெரும்பாலோர் கருதினாலும் அதற்குக் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்தான் ஒரு தீர்வு காண வேண்டும்.
லெகிட்: பிகேஆருக்குச் சரியான தலைமை இல்லை. அதுதான் பிரச்னை. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்றாகி விட்டது.
கட்சி என்னவானாலும் கவலையில்லை, எத்தனையோ பேர் நேரத்தையும் உழைப்பையும் போட்டு எதிரணி வெற்றிக்காகப் பாடுபடுகிறார்களே அதைப் பற்றிய கவலை இல்லை, ஒரு 92-வயது மனிதர் ஊழல் அரசாங்கத்தை மாற்ற நாடு முழுக்கச் சுற்றிச் சுற்றி வருவது பற்றிக் கவலை இல்லை.
பதவி ஆசை கொண்ட பிகேஆர் தலைவர்களுக்குத் தேர்தலில் நிற்பதற்கு இடம் வேண்டும், வெற்றிபெற்ற பின்னர் வரும் சலுகைகளை அனுபவிக்க வேண்டும்.
தலைவெட்டி: பலவீனம் தெளிவாக தெரிகிறது. தேர்தலுக்குச் சில வாரங்களே உள்ளன. இங்குக் குழிபறிக்கும் வேலைகளும் முதுகில் குத்தும் வேலைகளும் நிற்கவில்லை.
மக்களுக்கு வெறுப்பு வந்து விட்டது என்பதை என்றுதான் உணர்வார்களோ.
கெங்: அம்பிகாவுடன் ஒத்துப்போகிறேன். அப்போதைய பக்கத்தான் ரக்யாட்டிலும் இப்போதைய பக்கத்தான் ஹரப்பானிலும் பிகேஆர்தான் பலவீனமான இணைப்பு.
மலேசிய மக்களாகிய நாம் மாற்றத்துக்குத் தயாராக உள்ள வேளையில் இங்கே பிகேஆர் பிரமுகர்கள் மக்கள் நலனைவிட தங்கள் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பிகேஆரில் உள்ள பழைவர்களுக்கும் புதியவர்களுக்கும் சொல்ல விரும்புவது இதுதான் – நாங்கள் கட்சிக்காகத்தான் வாக்களிப்போம். உங்கள் பிரச்னைகளுக்கு உள்ளுக்குள்ளேயே தீர்வு காணுங்கள். மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து விடாதீர்கள்.
பாக் லாம்: அம்பிகா நல்லெண்ணத்தோடுதான் சொல்லி இருப்பார். ஆனால், பிகேஆரின் உள்விவகாரங்களை அம்பலப்படுத்தாமலிருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.
தலைவர்களுடன் அவருக்கு நேரடித் தொடர்பு இருக்கும். அவர்களுடன் தொடர்புகொண்டு அவரின் கவலையையும் மக்களின் கவலையையும் தெரிவிக்கலாமே.
சினார் பெலாவான்: அம்பிகா பிகேஆர் உறுப்பினர் அல்ல. அந்தக் கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து இவர் அக்கறை கொள்ள வேண்டியதில்லை.
ஒருவேளை வான் அசிசா காதில் ஓதி கருத்துச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டிருப்பாரோ?
கொகிடோ எர்கோ சம்: பிஎன்னுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அம்பிகாவின் கருத்துரை பொருத்தமானதே, சரியான நேரத்தில்தான் அது சொல்லப்பட்டிருக்கிறது. பிகேஆர், கடைசிக் கட்டத்தில் வேண்டாம் இந்தத் தடுமாற்றம்.
பெயரிலி _7c9a867c: நினைக்கவே சங்கடமாக உள்ளது. கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாதபோது பிகேஆர் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறது?
ஹரப்பானின் மற்ற கட்சிகளில் எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. பிரச்னை பிகேஆரில் மட்டும்தான்.
நேரானவன்: வான் அசிசா, அஸ்மின், கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து உங்களுக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளோம். இந்தக் கணத்துக்காகத்தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம். பாதை திறந்து விட்டது. ஆனால், சில்லறைத்தனமான செயல்களால் எல்லாம் கெட்டுப்போய்விடுமோ என்று அஞ்சுகிறோம்.
எங்கள் எதிர்பார்ப்பை வீணாக்கி விடாதீர்கள், எங்கள் எதிர்காலமே இருண்டு போகும்.
121: பிகேஆர் தலைவர்களின் தலை வீங்கி விட்டது. அம்னோ கட்சியினர்போல் நடந்து கொள்கிறார்கள்.
எங்களைச் சிறுவர்களாக நினைத்து சிறுப்பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். எங்களுக்குத் தேவை மாற்றம். அதற்காக விவேகமாக நடந்து கொள்ளுங்கள், திமிராக நடந்து கொள்ளாதீர்கள்.