கான்: போட்டியிட தேர்வு செய்யப்படாவிட்டாலும் பிஎன் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்வேன்

 

14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர், ரவாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தேர்வு செய்யப்படாவிட்டாலும் தாம் பிஎ ன் – னுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடரப் போவதாக பிகேஆரின் கான் பெய் நெய் இன்று சூளுரைத்தார்.

ரவாங் வாக்காளர்கள் மே 9 இல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தாம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்றும் பக்கத்தான் ஹரப்பான் பரப்புரை குழுவின் ஓர் அங்கமாக இருக்கப் போவதாகவும் உறுதியளித்தார். தம்மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

பொது நிதி ஒதுக்கீட்டை தாம் தவறாகப் பயன்படுத்தியாகக் குற்றம் சாட்டி எழுதப்பட்ட கடிதம் தமது ரவாங் இருக்கையைப் பிடிங்கிக் கொள்ள விரும்பியவர்களின் சதித் திட்டம் என்று கூறிய கான், கட்சித் தலைவர்களைச் சந்தித்து தம்மைத் தற்காத்துக் கொள்ள தமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவே இல்லை என்றாரவர்.

அவருக்கு மாற்றாக நியமிக்கப்பட்டிருக்கும் சுவா வே கீட் அச்சதித் திட்டத்திற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறினார். தாம் செய்ததெல்லாம் கானுக்கு எதிரான புகாரை தமது எஜமானரும் செலயாங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங்கிடம் கொடுத்தது மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று தொடர்பு கொண்ட போது, லியோங் கருத்துரைக்க மறுத்து விட்டார்.