14வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சிறைவாசத்தில் உள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அவரது கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கும் கட்சியில் மேலாண்மை செலுத்தவும் பிஎன் இடமளித்திருப்பது ஏன் என்று கேள்விகள் எழுவதாக த ஸ்டார் நாளேட்டின் ஆய்வுக் கட்டுரையொன்று கூறுகிறது.
அன்வார் செராஸ் மறுசீரமைப்பு மருத்துவமனையிலேயே தொடர்ந்து தங்கியிருக்க சிறைத்துறை அனுமதித்திருப்பது பிகேஆர் தலைவர்கள் அவரைச் சென்று காண வசதியாக உள்ளது என்பதால் இக்கேள்விகள் எழுந்துள்ளன.
சிறைத்துறை உள்துறை அமைச்சின்கீழ் உள்ளது. அதற்குப் பராமரிப்புத் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடிதான் பொறுப்பு.
“அன்வார் எந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்கிறாரோ அந்த அரசாங்கம் மருத்துவமனையில் இருந்தபடியே அவர் கட்சியை நிர்வகிப்பதற்கு வசதிகளைச் செய்து கொடுக்கிறது.
“இதன் தொடர்பில் பிகேஆரில் என்ன பேசப்படுகிறது என்றால், அரசாங்கம் பிகேஆர் நடப்புகளையும் அது என்ன விவாதிக்கிறது, என்ன திட்டமிடுகிறது என்பதையும் கண்காணிக்கவே இதைச் செய்துள்ளதாம்”, என்று ஸ்டார் நாளேட்டின் அந்த ஆய்வு கூறுகிறது.
“பரவலாக நிலவும் இன்னொரு கருத்து என்னவென்றால், பிகேஆர் மற்றும் பிஎன் தலைவர்களுக்கிடையில் ஏதோ அரசியல் பேரம் நடைபெறுகிறதாம்”.
அதிகாரிகள் பிகேஆர் தலைவர்கள் அன்வாரைச் சென்று காண்பதைத் தடுக்கவில்லை என்று கூறும் அக்கட்டுரை, பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், உதவித் தலைவர்கள் ரபிசி ரம்லி, நூருல் இஸ்ஸா ஆகியோர் 14வது பொதுத் தேர்தல் குறித்து அன்வாருடன் விவாதித்ததாக தெரிவித்தது.
“இது பிஎன், பிகேஆர் தலைவர்களுக்கிடையில் நடப்பது என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.
“அவர்கள் எதிரிகளா இல்லை எதிராளி போன்ற நண்பர்களா?
“ஒருவர் மற்றவரைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அன்வாருக்கும் பிகேஆர் தலைவர்களுக்கும் இந்தச் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டிருப்பது ஏன்”, என்று ஸ்டார் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.