14 ஆவது பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்கான “தேர்தல் கண்காணிப்பாளர்” அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மலேசிய மனித உரிமைகள் கழகம் (சுஹாகாம்) மேற்கொண்ட முயற்சியில் தோல்வியுற்றது.
இந்த அனுமதி மறுப்பினால் சுஹாகாம் உறுப்பினர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் தேர்தலின் போது அனைத்துலக கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள் என்று சுஹாகாமிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சுஹாகாம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் அல்லது அவை இல்லாதிருப்பது மனித உரிமைகளை முழுமையாக்கும் ஒன்றாகும் என்று கூறும் சுஹாகாமின் அறிக்கை,
நேர்மையான தேர்தல்கள் சம்பந்தப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் கோட்பாடுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மேலும் கூறுகிறது.
ஏழு நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்கள்
கடந்த ஏப்ரல் 10 இல், குறைந்தபட்சம் ஏழு வெளிநாட்டு தேர்தல் நிருவாக அமைப்புகளின் பிரதிநிதிகள் – இந்தோனேசியா, தாய்லாந்து, மாலத்தீவு, திமோர் லெஸ்தே, கம்போடியா, கிர்கிஸ்தான் மற்றும் அஸெர்பைஜான் – தேர்தலை கண்காணிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மேலும், தேர்தல் ஆணையம் அறிமுகமில்லாத மலேசியன் கோமன்வெல்த் ஆய்வுகள் மையத்திற்கும்கூட (எம்சிஎஸ்சி) தேர்தலை கண்காணிக்க அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் வாக்காளர் நியமனத்திற்கு இன்னும் இரு நாள்களே இருக்கும் வேளையில், இந்தத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் செய்ய வேண்டியவை பற்றியும், அவர்களின் அடையாளம் பற்றியும் தேர்தல் ஆணையும் எந்த அறிவிப்பும் செய்யவில்லை.