அச்சமில்லை, அச்சமில்லை என்கிறார் நஜிப்பை எதிர்த்து போட்டியிடும் ஸாகிட்

 

பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பெர்சத்து வேட்பாளர் ஸாகிட் முகமட் அரிப் கடும் விளைவுகளை எதிர்நோக்கக்கூடும் என்று அவரது நண்பர்களால் எச்சரிக்கப்பட்டிருந்தும் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

இந்த எச்சரிக்கைகள் நஜிப்புக்கு எதிராக தம்மை போட்டியிட கட்சி தமக்கு இட்ட உத்தரவுகளை ஏற்றுக்கொள்வதலிருந்து தம்மை மாற்றவில்லை என்று ஸாகிட் கூறினார்.

நான் ஏன் பெக்கானில் போட்டியிடுகிறேன் என்று மக்கள் என்னைக் கேட்கிறார்கள். நஜிப்புடன் மோத வேண்டாம் என்று எனக்கு ஆலோசனை கூறினர். எனது பாதுகாப்பு குறித்து எனக்கு நினைவூட்டினர். இந்தியாவிலிருந்து வரும் ஒரு மந்திரவாதியால் (போமோ) நான் எப்படி பாதிக்கப்படுவேன் என்று என்னை எச்சரித்தனர்.

ஆனால், நான் எல்லாம் ஆண்டவன் செயல் என்ற நம்பிக்கை கொண்டவன் என்று ஸாகிட் மலேசியாகினியிடம் கூறினார்.

ஸாகிட், 52, முன்னாள் துணைப் பிரதமர் காபார் பாபாவின் பேரன் ஆவார். முன்பு பிகேஆர் உறுப்பினராக இருந்து பின்னர் அம்னோவில் மீண்டும் இணைந்தார். அவர் இப்போது பெர்சத்துவின் மத்தியக் குழு உறுப்பினர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், பெல்டா முறைகேடுகள் சம்பந்தமாக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) ஸாகிட்டை கைது செய்து ஒன்பது நாள்கள் வரையில் தடுத்து வைத்திருந்தது. அவரது வீட்டை துருவித்துருவித் தேடினர்.

“எனது தடுப்புக் காவல் ஓர் அரசியல் விளையாட்டு. எனது வீட்டில் அவர்கள் எதையும் காணவில்லை”, என்று கூறிய ஸாகிட், தமது எதிரிகள் “கொள்ளைக்காரவாதிகள்” என்ற அவப்பெயரை உலகளவில் பெற்றுள்ளனர், என்று ஸாகிட் கூறினார்.

“நான் பணக்காரராக விரும்பியிருந்தால், நான் அவர்களுடன் சேர்ந்திருப்பேன். ஆனால், நான் கோட்பாடுகள் உடையவன். அதைத்தான் காபார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்”, என்று ஸாகிட் மேலும் கூறினார்