இன்று 14வது பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள்.
காலை தொடங்கி நாடெங்கிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி சுறுசுறுப்பாக நடந்தது. அதேவேளை ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன.
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டிபோட தகுதியில்லை என நிராகரிக்கப்பட்டார்.
அவர்மீதுள்ள பழைய வழக்குகளே காரணம் எனக் கூறப்படுகிறது.
நெகிரி செம்பிலான், ரெம்பாவ், ரந்தாவில், பராமரிப்பு மந்திரி புசார் முகம்மட் ஹசன் போட்டியின்றி வெற்றிபெற்றார்.
எப்படி? அவரை எதிர்த்துப் போட்டியிடவிருந்த பிகேஆர் வேட்பாளர் எஸ். ஸ்ரீராம் இசி சான்றுச் சிட்டையைக் கொண்டுவரவில்லை. அதனால் வேட்பாளர் நியமன அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
மைகார்ட் கொண்டுவராத பிகேஆர் வேட்பாளர்
கூட்டரசுப் பிரதேசம் வங்சா மாஜுவில், பிகேஆரின் டான் ஈ கியு மைகார்டைக் கொண்டு வரவில்லை. அதனால் அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியாத நிலை. நல்ல வேளையாக அவரது மைகார்ட் பிரதி ஒன்று இருந்தது. அதைத் தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார். இஅவரும் மனுவைத் தாக்கல் செய்ய முடிந்தது.
டான் வங்சா மாஜு நாடாளுமன்றத் தொகுதியில் பிஎன்னின் இயு தியோங் லுக், பாஸின் ரசாலி துமிரான் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
ஷா ஆலமில், அமனாவின் காலிட் சமட் அத்தொகுதியைத் தற்காத்துக்கொள்ள போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பிஎன்னின் அஸ்ஹாரி ஷாரியும் பாஸின் ஜுஹ்டி மர்சுகியும் களமிறங்குகிறார்கள்.
மைகார்ட் முகவரியால் பிகேஆர் வேட்பாளர் மாற்றப்பட்டார்
சிலாங்கூர், கோலசிலாங்கூரில் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் ஹரப்பான் வேட்பாளராக மனு தாக்கல் செய்ய வந்தார் சிவமலர் கணபதி. ஆனால், கடைசி நேரத்தில் அவருக்குப் பதில் ஜுவாரியா சுல்கிப்ளி வேட்பாளராக்கப்பட்டார்.
கோலா சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமனாவின் வியூக இயக்குனர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட்டும் இதை உறுதிப்படுத்தினார்.
“சில பிரச்னைகள். சிலருடன் தொடர்பு கொண்ட பிறகு ஜுவாரியா வேட்பாளராக்கப்பட்டார்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
விசயம் இதுதான். பகாங்கைச் சேர்ந்தவர் சிவமலர். அவர் அவரது மைகார்டில் சிலாங்கூருக்கு முகவரியை மாற்றம் செய்யவில்லையாம். அதனால் சிலாங்கூரில் போட்டி போட முடியாது போயிற்று.
அரசியல்வாதிக்கு அறிவு வேண்டும். அது இல்லாதவற்கு தொகுதி இல்லாமல் போனால் மக்களுக்கு நட்டம் இல்லை.