14வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார் வலைப்பதிவர் பாபாகோமோ.
இன்று காலை மலேசியாகினிக்கு அனுப்பிவைத்த செய்தியில் பாபாகோமோ என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் வான் முகம்மட் அஸ்ரி, மசீச வேட்பாளர் லியோங் கொக் வீ-க்கு இடம்விட்டு ஒதுங்கிக் கொள்வதாகக் கூறினார்.
இதற்குமுன் அவர், பிகேஆர் வேட்பாளர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்டவும் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பாடம் படித்துக் கொடுக்கும் வகையிலும் பாண்டான் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார்.
அக்குடும்பத்தார்மீது அவருக்கு சரியான கடுப்பு.
“மனம்போன போக்கில் தந்தை, தாயார், மகள் ஆகியோர் தங்களுக்குள் இடங்களை மாற்றிக்கொள்கிறார்கள்….. எம்பி ஆகி சம்பளம், சலுகை பெற்று வாழ மக்களை ரப்பர் முத்திரைகளாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்”, என்று கடந்த திங்கள்கிழமை அவர் கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜோகூரில், பத்து பாகாட் அம்னோ தொகுதித் தலைவர் முகம்மட் புவாட் ஸர்காஷி ஒரு சுயேச்சையாக அத்தொகுதியில் போட்டியிடுவார் என்று ஊகங்கள் நிலவின.
ஆனால், சிறப்பு விவகாரத் துறை(ஜாசா) முன்னாள் தலைமை இயக்குனரான அவர் கடைசி வரை வேட்பாளர் நியமன மையத்துக்கு வரவே இல்லை.
அத்தொகுதி வேட்பாளராக ஜோகூர் அம்னோ அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதறிந்து கடுப்பானார் புவாட்.
ஜாசாவிலிருந்து வெளியேறிய அவர், ஜோகூர் பராமரிப்பு மந்திரி புசார் காலிட் நோர்டின்மீதும் பராமரிப்புத் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி மீதும் தாக்குதல்களைத் தொடுத்தார்.
ஜோகூர் அம்னோ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தையும் அவர் சாடினார். அதில் ஊழல்கள் நிறைந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
பிஎன் மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலிலும் 14வது பொதுத் தேர்தலில் போட்டிபோட மாட்டார்.
அம்னோ மகளிர் தலைவருமான ஷரிசாட், தம் முடிவை ஏற்கனவே பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் தெரிவித்து விட்டதாக கூறினார்.
“ஏனென்று நஜிப் கேட்டார். தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவதே முக்கியம் என்றேன்.
“எனவே, பிஎன் தேர்தல் இயந்திரத்தோடு நாடு முழுக்கப் பயணம் செய்து பிஎன் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த முன்னுரிமை கொடுப்பேன், அதனால் இம்முறை போட்டிபோட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்”, என்றாரவர்.