தேர்தலோ தேர்தல் 111: களம் காண்பதற்கு முன்பே தகுதியிழந்த ஹரப்பான் வேட்பாளர்கள்

பக்கத்தான்  ஹரப்பான்   வேட்பாளர்களில்    குறைந்தது  நால்வர்   போட்டியில்   குதிப்பதற்கு  முன்பே     தகுதி   இழந்து  விட்டார்கள்.

அவர்களில்   குறிப்பிடத்தக்கவர்  பத்து    தொகுதியில்     போட்டியிடவிருந்த    பிகேஆர்   உதவித்    தலைவர்   தியான்   சுவா.  10   ஆண்டுகள்   அத்தொகுதியில்  நாடாளுமன்ற  உறுப்பினராக    இருந்து   வந்துள்ளவர்.

கடந்த   மாதம்   ஒரு   வழக்கில்       ரிம2,000   தண்டம்   விதிக்கப்பட்டதுதான்     அவரது   தகுதியிழப்புக்குக்   காரணம்    என்று   சொல்லப்படுகிறது.  இதேபோல்   2010-இலும்    அவருக்குத்   தண்டம்   விதிக்கப்பட்டது.   ஆனால்,  அது  கடந்த   பொதுத்    தேர்தலில்    அவர்   களமிறங்கத்    தடையாக  இருக்கவில்லை.

ஜோகூரில்,  புக்கிட்  பாசிரில்,   பெர்சத்து   வேட்பாளர்   பிஸி   ஜிஹாட்டின்  நியமன  பாரங்கள்   நிராகரிக்கப்பட்டன.

அவர்  நொடித்துப்போனவர்   என்று  கூறப்பட்டது.

ஆனால்,  பிஸி,  நியமன   நாளுக்கு  முன்னதாகவே    நொடிப்புநிலைக்குத்   தீர்வு  கண்டுவிட்டார்    என்றும்   அதற்கான   ஆதாரங்களும்    அவரிடம்   இருந்தன    என்றும்   பெர்சத்து     தலைவர்   முகைதின்   யாசின்   கூறினார்.

“ஆனால்,  தேர்தல்   அதிகாரி     சரிபார்த்ததாகவும்   ஆகக்   கடைசி  நிலவரப்படி    அவர்   நொடித்துப்போனவர்தான்   என்றும்  கூறுகிறார்.  எது   உண்மை   என்பது   எனக்குப்   புரியவில்லை”,  என  முகைதின்   செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

இதே   நிலைதான்   பினாங்கு   மாநிலத்தில்  பினாங்கா   சட்டமன்றத்   தொகுதிக்கான   பெர்சத்து   வேட்பாளர்    யாக்கூப்   ஒஸ்மானுக்கும்.

யாக்கூப்      எல்லாவற்றையும்     சரிபார்த்து      விட்டதாகவும்       தான்   நொடித்துப்போனவர்   அல்ல  என்றும்    கூறுகிறார்.

“எந்தப்  பிரச்னையும்   இல்லை.  யாரும்  சம்மன்   அனுப்பவில்லை.     நான் நொடித்துப்போனதாக   அறிவிக்கவில்லை.  ஆனால்,  இது   தேர்தல்    ஆணையத்தின்   முடிவு,   எதுவும்   செய்ய  இயலாது”,  என்றவர்   சொன்னதாக   த   ஸ்டார்   ஆன்லைன்  கூறிற்று.

கிளந்தானில்,  தாவாங்,   கோலா  பாலா    ஆகிய    இரண்டு   சட்டமன்ற   தொகுதிகளிலும்     பிகேஆர்   வேட்பாளர்கள்   போட்டியிடும்   தகுதியை   இழந்தனர்.

பிகேஆரின்  முகம்மட்   அஸிஹான்  சே   செமானின்  அடையாள  அட்டை  கிளந்தான்   முகவரியைக்   கொண்டிருக்கவில்லை.  அதனால்   அவரது  வேட்புமனு   நிராகரிக்கப்பட்டது.

பிகேஆரின்  முகம்மட்  ஹபிட்ஸ்   அம்ரான்   நொடித்துப்போனவர்   என்ற   காரணத்துக்காக  நிராகரிக்கப்பட்டாராம்.   ஆனால்,  அது  குறித்து    அவர்   கருத்துரைக்க   மறுத்தார்.

ரந்தாவில்,  பிகேஆரின்   டாக்டர்   ஸ்ரீராம்,  தேர்தல்   ஆணையம்   கொடுத்திருந்த   அனுமதிச்  சீட்டை  உடன்  கொண்டு  செல்லவில்லை.   அதனால்  நியமன   அலுவலகத்துக்குள்     அவர்   அனுமதிக்கப்படவில்லை.  இறுதியில்   அவர்   அனுமதிக்கப்பட்டபோது     வேட்புமனுவைத்   தாக்கல்    செய்ய   வேண்டிய   காலம்   கடந்து   விட்டது.

இதனால்,  நெகிரி     செம்பிலானின்  பராமரிப்பு  மந்திரி   புசார்  முகம்மட்  ஹசான்   அத்தொகுதியில்   போட்டியின்றி   வெற்றி  பெற்றதாக    அறிவிக்கப்பட்டது.

இதனிடையே,  பிகேஆர்   உதவித்   தலைவர்   ரபிசி   ரம்லி    ஓர்    அறிக்கையில்   ரந்தாவ்   தேர்தல்    அதிகாரி   வேண்டுமென்றே   பிகேஆர்   வேட்பாளரைத்   தாமதப்படுத்தி  வைத்திருந்ததாகக்   குற்றஞ்சாட்டினார்.

“நெகிரி  செம்பிலான்   தேர்தல்   ஆணைய  இயக்குனர்,  காலை  மணி   9.30க்கே   வேட்பாளரை   உள்ளே  அனுமதிக்குமாறு    தேர்தல்    அதிகாரிக்கு   உத்தரவிட்டிருந்தாராம்.  அங்கிருந்த   ஹரப்பான்   பிரதிநிதிகள்   எனக்குத்   தெரிவித்தார்கள்.

“ஆனால்,  தேர்தல்   அதிகாரிதான்  வேண்டுமென்றே   தாமதப்படுத்தி   காலை  10.03க்குத்தான்   உள்ளே  அனுப்பியிருக்கிறார்.  அவரது  வேட்பு  மனு   நிராகரிக்கப்பட்டது”,  என்று  ரபிசி   கூறினார்.