ஜெயக்குமார் : சுங்கை சிப்புட் நாடாளுமன்றம் பாரிசானுக்கு பிகேஆரின் பரிசு

புதிய அரசாங்கத்தை உருவாக்க, ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவை வெளிப்படுத்திய போதிலும், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அக்கூட்டணியின் போக்கு, ஏமாற்றமளிப்பதாக டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாமென ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்த போதிலும், பிகேஆர் ஒரு வேட்பாளரை இன்று நியமனம் செய்தது.

ஜெயக்குமாரோடு, பி.என்.-இன் எஸ்.கே. தேவமணி, பிகேஆரின் எஸ். கேசவன் மற்றும் பாஸ் கட்சியின் டாக்டர் இஷாக் இப்ராஹிம் ஆகியோரை உள்ளடக்கிய நான்கு முனை போராட்டத்தை அந்தத் தொகுதி காணவுள்ளது.

பி.எஸ்.எம்., பக்காத்தான் ரக்யாட் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், 2008 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் பி.கே.ஆர். சின்னத்தைப் பயன்படுத்தி, கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.

“தேர்தல் சின்னம் பிரச்சினை மற்றும் பி.எஸ்.எம்.-க்கு சில இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டியதன் காரணமாக இன்று இந்நிலை ஏற்பட்டுவிட்டது என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்.

“அரசாங்கத்தில் ஒரு மாற்றத்தை உண்மையில் பார்க்க விரும்பிய வாக்காளர்களின் ஓட்டுகள், இப்போது பி.எஸ்.எம். மற்றும் பிகேஆருக்கு இடையே உடைபடும்.

“பி.எஸ்.எம். இத்தொகுதியில் ஆற்றிவந்த பணிகளை ஹராப்பான் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டும், பிஎன்-ஐ ஆட்சியிலிருந்து தூக்கியெறிய நாங்கள் அவர்களுடன் இருப்போம் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்றார்.

இரு எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான வாக்குகளில் பிளவு ஏற்பட்டால், அது பாரிசானுக்கே நன்மையளிக்கும் என்று அவர் கூறினார்.

“பி.எஸ்.எம். சின்னத்தில் என்ன தவறு உள்ளது? புத்ராஜெயாவை நீங்கள் கையகப்படுத்த விரும்பினால், ஒவ்வொரு நாற்காலியும் முக்கியமானதுதானே? மத்திய அரசை உருவாக்குவதற்கு நாங்கள் ஹராப்பானுக்கு ஆதரவளிப்போம் என்று எப்போதும் கூறிவந்துள்ளோம்.”

அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் ஜெயக்குமாரைப் பற்றி நல்ல விதமாகவே கருத்து தெரிவித்தனர். அவர் சுங்கை சிப்புட்டில் ஒரு கடின உழைப்பாளி, உதவும் மனப்பான்மை மிகுந்த ஒரு மக்கள் பிரதிநிதி என்றே அடையாளப்படுத்தினர்.

மஇகா துணைத் தலைவர் தேவமணி, ஜெயக்குமாரை ஒரு ‘சிறந்த மனிதர்’ என புகழ்ந்துரைத்தார்.

“டாக்டர் ஜெயக்குமார் என் நண்பர், ஒரு சிறந்த மனிதர், ஆனால் அதிகமான மக்களுக்கு உதவ அவருக்கு வளங்கள் தேவை, துரதிருஷ்டவசமாக அவரிடம் போதிய வளங்கள் இல்லை.

“என்னை எடுத்துகொண்டால், மத்திய அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவில் இருக்கிறேன், இத்தொகுதிக்கான பல திட்டங்களை நாங்கள் கொண்டுள்ளோம்,” என்று அவர் நியமன மையத்தில் தெரிவித்தார்.

எதிர்த்தரப்பு வாக்குகளின் பிளவு, இறுதியில் பாரிசானுக்கு வெற்றியைக் கொண்டுவரும் என்று தேவமணி நம்புகிறார்.

“ஆமாம், நாங்கள் அதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள் எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தருவார்கள் என நம்புகிறேன்.

“சுங்கை சிப்புட் மக்கள் மேம்பாடு, சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிகமான வாய்ப்பு வசதிகளை எதிர்ப்பார்க்கின்றனர். இவற்றை பிஎன் அரசாங்கத்தால் மட்டுமே வழங்க முடியும்.

“என்னால் இங்கே இவற்றை உருவாக்க முடியும், அதனை நிரூபிக்க எனக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள். நான் தோல்வி அடைந்தால், என்னை நீங்கள் தூக்கி எறியலாம்.”

ஜெயக்குமார் ஒரு ‘நல்ல மனிதர்’, சுங்கை சிப்புட்டில் தனக்கென ஒரு பாணியை அவர் வைத்திருந்தாலும், மத்திய அரசாங்கத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புவதாக பிகேஆர் வேட்பாளர் எஸ். கேசவன் தெரிவித்தார்.

“அவர் இத்தொகுதி மக்களுக்கு நிறைய செய்துள்ளார், ஆனால் மக்கள் மத்திய அரசாங்கத்தில் மாற்றம் வேண்டுமென எதிர்பார்ப்பதால், ஹராப்பானுக்கே வாக்களிப்பர்.

இதற்கிடையே, பாஸ் கட்சி வேட்பாளர், அம்னோ, டிஏபிக்கு அடுத்த பெரியக் கட்சி பாஸ் என்பதால், மக்கள் பாஸ்சுக்கு வாக்களிப்பர் எனக் கூறியுள்ளார்.

“நாங்கள் ஒரு பெரியக் கட்சி, நாட்டில் மூன்றாவது பெரியக் கட்சி என்பதால், பாரிசானைத் தோற்கடிக்க அனைவரும் பாஸ்சுக்கு வாக்களிக்க வேண்டும்,” என்றார் அவர்.