தன்னுடைய தொகுதியில் பாஸ் போட்டியிடாதது குறித்து மலாக்கா சிஎம் -முக்கே ஆச்சரியம்

மலாக்காவில்,  மலாய்  வாக்காளர்கள்  உள்ள   இடங்களில்   எல்லாம்    போட்டியிடும்  கங்கணத்துடன்   களமிறங்கியுள்ளது   பாஸ்.

ஆனால்,  அக்கட்சி  இட்ரிஸ்  ஹருன்  தொகுதியான  சுங்கை   ஊடாங்கில்   தனது   வேட்பாளரை  நிறுத்தவில்லை.  80விழுக்காடு   மலாய்  வாக்காளர்களைக்   கொண்ட    அத்தொகுதியில்   அது  போட்டியிடாதது  மலாக்கா   பராமரிப்பு   முதலமைச்சருக்கே    வியப்பளித்தது.

அது  குறித்து   அவரிடம்  வினவியதற்கு    அவரும்   பாஸிடம்  விளக்கம்  பெற   விரும்பியதாகக்   கூறினார்.

“சற்று  முன்னர்தான்  எனக்குப்   பதில்  கிடைத்தது.  அவர்கள்   அந்த  இடத்துக்கு  மதிப்பளிக்கிறார்களாம்”,  என்று  இட்ரிஸ்  கூறினார்.

இவ்வளவுக்கும்   அந்த  இடத்தில்   பிகேஆரைவிட   பாஸ்தான்   வலுவான   எதிர்க்கட்சி.

அத்தொகுதியைத்   தற்காக்கும்   இட்ரிஸ்,   போட்டியிடாத   பாஸுக்கு    நன்றி   தெரிவித்துக்  கொண்டார்.

சுங்கை   ஊடாங்    தவிர,  மலாக்காவில்   மேலும்    நான்கு   இடங்களில்  பாஸ்  போட்டியிடவில்லை.   அவையெல்லாம்  சீன  வாக்காளர்களைப்  பெரும்பான்மையாகக்   கொண்டவை,  டிஏபி    கோட்டைகளாகத்   திகழும்   தொகுதிகள்.

நாடாளுமன்றத்   தொகுதியான  கோத்தா   மலாக்கா,    சட்டமன்றத்   தொகுதிகளான   கெசிடாங்,  கோத்தா  லக்சமனா.  பண்டார்   ஹிலிர்   ஆகியவையே    அந்நான்குமாகும்.