விமானத்தில் சதிவேலை உண்மையே: மீண்டும் வலியுறுத்துகிறார் மகாதிர்

பக்கத்தான்  ஹரப்பான்   தலைவர்    டாக்டர்   மகாதிர்    முகம்மட்,      லங்காவிக்குச்  செல்ல  ஏற்பாடு   செய்திருந்த   தனியார்   ஜெட்  விமானத்தில்   நாச  வேலைகள்   நடந்திருப்பதாக  தாம்   கூறுவது   உண்மைதான்   என்பதை   மறுபடியும்   வலியுறுத்தியுள்ளார்.

நேற்றிரவு   லங்காவியில்   ஒரு   செராமாவில்    பேசிய     அவர்,   மலேசிய   சிவில்   விமானப்  போக்குவரத்து    வாரியம்(சிஏஏஎம்)கூட   விமானத்தின்  முன்  டயர்   “கடுமையாகச்  சேதப்படுத்தப்பட்டிருந்தது”    என்பதை ஒப்புக்கொண்டதாகக்  கூறினார்.

“ஜெட்  விமானத்தால்   பறக்க  இயலாது   என்பது   சிஏஏஎம்-முக்குத்    தெரியும்.  அது   சதிவேலையா   இல்லையா   என்பது   விசாரணை   நடத்தினால்தான்   தெரிய  வரும்.

“நான்  லங்காவியில்   போட்டியிடுவதைத்   தடுப்பதற்கு    வேண்டுமென்றே அவ்வாறு    செய்திருந்தார்கள்”,  என்று    மகாதிர்   கூறினார்.

சிஏஏஎம்  நேற்று  ஓர்    அறிக்கையில்    மகாதிர்  “சதிவேலை”    என்று   கூறியிருப்பதை   மறுத்து   அது    “தொழில்நுட்பக்  கோளாறு”   என்று  குறிப்பிட்டது.

“ஒரு  சிறிய   தொழில்நுட்பக்  கோளாறு   காரணமாக,     முன்பக்க    டயரில்   காற்று   வெளியேறியிருந்ததால்    அந்த   விமானம்   பறப்பதற்குத்   தகுதியற்றிருந்தது”,  என்று   அது   கூறியது.