பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டம் முதன்முதலாகப் பாய்ந்தது ஒரு வெளிநாட்டவர்மீது

பொய்ச்  செய்தித்   தடுப்புச்   சட்டத்தின்கீழ்   குற்றம்  சாட்டப்படும்   முதல்   ஆள்  டென்மார்க்   நாட்டைச்   சேர்ந்தவர்.  போலீஸ்  குறித்து   தவறான   செய்தியைக்  கூறியதாக   அவர்மீது  குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.

ஹமாஸ்   உறுப்பினர்   ஃபாதி முகம்மட்   அல்-பட்ஷ்   இம்மாதத்   தொடக்கத்தில்   கோலாலும்பூரில்   கொலை    செய்யப்பட்டபோது   போலீசார்   சம்பவம்   நடந்த   இடத்துக்குத்   தாமதமாக   வந்ததாக    அவர்   கூறியதுதான்   அவர்மீது  குற்றம்   சாட்டப்படுவதற்குக்  காரணம்    என்று   த   சன்   நாளேடு   கூறியது.

பொய்ச்  செய்தித்   தடுப்புச்   சட்டத்தின்   பிரிவு  (4) (1)-இன்கீழ்   பொய்ச்  செய்தியை  உருவாக்கி,   வெளியிட்டதாக   அவர்மீது  குற்றம்   சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி  எனத்   தீர்ப்பளிக்கப்பட்டால்   அவருக்கு   ஆறாண்டுவரை  சிறை   அல்லது  ரிம500,000வரை  தண்டம்   அல்லது   இரண்டும்   சேர்த்து   விதிக்கப்படலாம்.

அம்மனிதர்   சமூக  வலைத்   தளத்தில்   பதிவேற்றம்    செய்திருந்த   ஒரு  காணொளியில்,   சம்பவம்   நடந்த   நேரத்தில்   கொலை  செய்யப்பட்ட   நபருடன்  இருந்ததாகவும்    போலீஸ்   50  நிமிடம்  கழித்துத்தான்  அந்த  இடத்துக்கு   வந்து   சேர்ந்தது   என்றும்   அவர்  கூறியிருந்தார்.

அம்புலன்ஸ்   வண்டி   ஒரு  மணி  நேரத்துக்குப்  பிறகுதான்  வந்ததாம்.

போலீஸ்  அக்குற்றச்சாட்டை  வன்மையாக    மறுத்தது.  பத்து   நிமிடத்துக்குள்   ஒரு  போலீஸ்   ரோந்து   கார்   சம்பவம்   நடந்த   இடத்தை   அடைந்தது  என்று  அது  கூறிற்று.

யேமெனி   வம்சாவளியைச்   சேர்ந்த   அந்த  டேனிஷ்காரர்   மூன்று   வாரங்களுக்கு  முன்னர்தான்  மலேசியா  வந்தார்.