வேட்பாளர் நியமன மைய விவகாரம்: இசி போலீஸ் விசாரணைக்குக் காத்திருக்கிறது

தேர்தல்    ஆணையம் (இசி) வேட்பாளர்  ஒருவர்   வேட்புமனு   தாக்கல்    செய்ய   அனுமதிக்கப்படாதது  குறித்து   இப்போதைக்குக்    கருத்துத்   தெரிவிக்காது.  அச்சம்பவம்  தொடர்பில்   முழு    அறிக்கை   கிடைக்க  வேண்டும்,  போலீஸ்  விசாரணையும்  நடத்தப்பட   வேண்டும்,    அதன்  பின்னரே   இசி  அறிக்கை   வெளியிடும்.

இசி  தலைவர்  முகம்மட்  ஹஷிம்,   சில   தரப்புகள்   போலீஸ்  புகார்  செய்திருப்பதாக     தெரிவதால்  இப்போதைக்கு   அறிக்கை   வெளியிடுவது  முறையாகாது   என்றார்.

“சம்பந்தப்பட்ட   தரப்பினருக்குச்   சட்டப்படியான   வழிமுறைகளை    நாட    எல்லா   உரிமையும்   உண்டு”,  என்றவர்  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

அவ்விவகாரத்தைப்  போலீஸ்   விசாரிப்பதால்   பொதுமக்கள்    ஊகங்களுக்கு இடந்தரக்கூடாது    என்றவர்   கேட்டுக்கொண்டார்.

சனிக்கிழமை  பிகேஆர்  ரந்தாவ்    வேட்பாளர்   டாக்டர்  எஸ். ஸ்ரீ ராம் ,  வேட்பாளருக்குரிய  அனுமதி   அட்டையை  உடன்   கொண்டு   செல்லாததால்   வேட்புமனு  தாக்கல்   செய்யும்  மையத்துக்குள்  செல்ல  அனுமதி   மறுக்கப்பட்டு   வேட்புமனுவைத்  தாக்கல்   செய்ய  முடியாது   போயிற்று.

அதன்  விளைவாக,    போட்டியில்லாததால்    பிஎன்   வேட்பாளரான   நெகிரி   செம்பிலான்   மந்திரி   புசார்   முகம்மட்  ஹசான்   ரந்தாவ்   சட்டமன்றத்  தொகுதி  வெற்றியாளராக   அறிவிக்கப்பட்டார்.

-பெர்னாமா