பத்துவில் ஹரப்பான் ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிப்பதென்று குழம்புகின்றனர்

பத்து  எம்பி   தியான்  சுவா   எதிர்வரும்   14வது   பொதுத்   தேர்தலில்     போட்டியிட  முடியாதென்று  நிராகரிக்கப்பட்டிருப்பதை    ஏற்றுக்கொள்ள    முடியாத    அவரின்   ஆதரவாளர்கள்   இனி   எப்படி  வாக்களிப்பது    என்று   புரியாமல்    குழம்பிப்  போயுள்ளனர்.

மலேசியாகினி   சந்தித்த  வாக்காளர்களில்   சிலர்   தாங்கள்   வாக்களிக்கப்  போவதில்லை   என்றார்கள்.  இன்னும் சிலர்   சுவாவின்   மனு   நிராகரிக்கப்பட்டதற்குக்   கண்டனம்    தெரிவிக்கும்   வகையில்   வாக்குச்  சீட்டுக்களைக்    கெடுத்து  செல்லாதபடி   ஆக்கப்போவதாகக்  கூறினர்.

இன்னும்  சிலர்,  22-வயது   சுயேச்சை    வேட்பாளர்தான்    தங்களின்    அடுத்த   தேர்வு    என்றனர்.

மலேசியாகினி   சந்தித்த   வாக்காளர்களில்   எவரும்   பாஸ்   வேட்பாளருக்கோ,   இன்னொரு   சுயேச்சை    வேட்பாளரான    முன்னாள்  பத்து  மஇகா   இளைஞர்    தலைவர்    எம்.பஞ்சமூர்த்திக்கோ   வாக்களிக்கப்பதாகக்  கூறவில்லை.

ஒரு  சிறு   எண்ணிக்கையினர்   பிஎன்னின்  டொமினிக்  லாவுக்குத்தான்     தங்களின்    ஆதரவு   என்றார்கள்.   பிஎன்  வேட்பாளர்   என்பதால்   அவரால்   தொகுதிக்கு   மேலும்  மேம்பட்டைக்  கொண்டுவர   முடியும்    என்றனர்.

செந்தூல்  மார்க்கெட்டில்    சந்தித்த   பணி ஓய்வுபெற்றவரான   வி.ராஜன், 60,  பிரபாகரனுக்கு  வாக்களிக்கப்   போவதாகச்  சொன்னார்.  அவரை   பிகேஆர்  “தத்தெடுத்துக்கொள்ளும்”   என்றவர்    நம்புகிறார்.

ஜாலான்  செந்தூலில்  மீ வியாபாரம்   செய்யும்   வொங்-கும்,   ஆக  இளைய   வயது   வேட்பாளரான  பிரபாகரனுக்குத்தான்   தன்னுடைய   வாக்கு    என்றார்.

“பிஎன்னுக்கோ,  பாஸுக்கோ   வாக்களிக்கப்   போவதில்லை.   எனக்கு   ஹுடுட்   வேண்டாம்”,  என்று   சொன்னார்.

பிஎன்  ஆதரவாளர்கள்   சுவாவின்    வேட்புமனு   நிராகரிக்கப்பட்டது  குறித்துக்  கவலைப்படவில்லை.   தங்களுக்குத்   தேவை     தங்களுக்கு    உதவக்  கூடிய   ஒரு  எம்பிதான்  என்பது   அவர்களின்  கட்சி.

எடுத்துக்காட்டுக்கு,  அங்காடிக்காரரான  கே.ரஞ்சினி,28,  அவரும்  அவரின்   குடும்பத்தாரும்    பிஎன்னுக்குத்தான்   வாக்களிக்கப்   போவதாகக்  கூறினார்.  பிஎன்தான்   அவர்களுக்கு   நிதி  உதவி   அளிக்கிறதாம்.

எழுதுபொருள்  விற்பனை  கடை  வைத்துள்ள  லியு   தியோங்   பூன்,60,  இம்முறை   பிஎன்னுக்குதான்  வாக்களிப்பார்.  எதிரணி   எம்பி-ஆல்   பயனில்லை  என்றார்.

“எதிரணி   எம்பி-ஆல்  ஒன்றும்   செய்ய  முடியாது.  அவர்களின்   பேச்சை   அரசாங்கம்   கேட்காது.  அதுதான்  இம்முறை  பிஎன்னுக்கே   என்   வாக்கு”,  என்றார்.

பாதுகாவலரான   எம்.சரவணன், 49,  தொகுதியில்    எங்கு   சென்றாலும்   சுவாவின்   மனு   நிராகரிக்கப்பட்டது   பற்றித்தான்   பேச்சாக  உள்ளது  என்றார்.

“காப்பிக்  கடையோ,  லாட்டரிக்  கடையோ,   பலசரக்குக்கடையோ   மக்கள்   இதைப்  பற்றித்தான்   பேசுகிறார்கள்.  பலர்   வருத்தமடைந்துள்ளனர்”,  என்றார்.

ஆனால்,  தன்  வாக்கு   யாருக்கு   என்பதை   அவர்    தெரிவிக்கவே  இல்லை.  மனச்சாட்சிப்படி   வாக்களிப்பாராம்.

கம்போங்  பாடாங்  பலாங்கில்   வசிக்கும்   குடும்பத்   தலைவி   நோர்ஹயாதி   அப்துல்    வாஹிப்புக்கு    சுவாவைப்  பற்றிப்   பேசியபோது   அழுகையே  வந்து  விட்டது.

“மிகவும்     வருத்தமாக     உள்ளது.     அவர்   எங்கள்  ஹீரோ. எங்கள்  கம்பத்துக்கு  (வீடுகளை   நில  உரிமையாளர்    எடுத்துக்கொள்ளாமல்   பாதுகாத்த)   அவர்   உண்மையிலேயே  ஒரு   ஹீரோதான்.

“ஒவ்வொரு   வாரமும்  எங்கள்  இடத்துக்கு    வருவார்.  கெண்டூரி,  தஹ்லில்   கலந்துகொள்வார். எல்லாரையும்   அவருக்குத்     தெரியும்.  நாங்களும்   அவரைத்தான்   விரும்புகிறோம்”,  என்றார்.

“என்னை  இப்போது  வங்சா  மாஜுவுக்கு   மாற்றி  விட்டார்கள்.  அங்கு   அவரின்   சகாவுக்கு (டான்  ஈ  கியு)  வாக்களிப்பேன்”,  என்றவர்  மேலும்   சொன்னார்.