தனக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், பாரிசான் வேட்பாளர் அல்லாத மற்ற வேட்பாளர்களைப் பத்து நாடாளுமன்றத்தில் ஆதரிக்கவுள்ளதாக தியான் சுவா தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் முடிவை இரத்து செய்ய முடியாத பட்சத்தில், தனது இறுதி முடிவாக அது இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியிலிருந்து தன்னை நீக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, இன்று நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார். அதன் விசாரணை புதன்கிழமை, மே 2-ம் தேதியன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு சாதகமாக அமையும் என்பதில் நம்பிக்கையில்லை என்றும் அவர் சொன்னார்.
மேலும், ஒருவேளை தான் அத்தொகுதியில் போட்டியிட முடியாமல் போனாலும், பாரிசானுக்கு யாரும் வாக்களிக்கக்கூடாது என, இன்றிரவு மெழுகுவர்த்தி விழிப்பு நிலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நூற்றுக்கணக்கான வாக்காளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
“எனக்கு வாக்குக் கொடுங்கள், ‘பத்து’வில் நான் போட்டியிடுகிறேனோ இல்லையோ, நீங்கள் பாரிசான் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டோம் என”, அவர்.கேட்டார்.