கிட் சியாங்: எனக்கும் மகாதிருக்கும் ஒருவேளை அன்வாருக்கும் இதுவே இறுதிப் போராட்டமாக இருக்கலாம்

வயதாகிக்கொண்டே   இருப்பதால்   தமக்கும்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டுக்கும்       அன்வார்  இப்ராகிமுக்கும்கூட    இதுவே   இறுதித்   தேர்தலாக   இருக்கக்கூடும்    என   டிஏபி   தலைவர்   லிம்  கிட்  சியாங்   இன்று  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

“எனக்கு  வயது  77. இந்த  14வது   பொதுத்   தேர்தல்   எனக்கு  12வது   தேர்தல்.  இதுவே  எனக்குக்  கடைசித்   தேர்தல்.

“மகாதிருக்கு  வயது  93.  இன்னும்  ஐந்தாண்டுகளில்   2023-இல்   15வது   பொதுத்  தேர்தலிலும்    அரசியல்  மாற்றத்துக்காக   அவர்  போராட  வேண்டும்  என்று  யாரும்   எதிர்பார்க்கப்   போவதில்லை,”   என்று   லிம்  கூறினார்.

அன்வாரைப்  பொருத்தவரை  ஜூன்  8-இல்    விடுதலையாவார்.  அதன்  பிறகு   நான்கு    மாதங்களில்    அவருக்கு  வயது  71  ஆகும்.

“மே 9-இல்  ஹரப்பானால்   அரசாங்கத்தை   அமைக்க  முடியாமல்   போகுமானால்   அன்வாரால்  நாட்டின்  எட்டாவது   பிரதமராக  முடியாது. அப்படிப்பட்ட   நிலையில்  15வது   பொதுத்   தேர்தலில்   அரசியல்   மாற்றத்துக்காக   அவர்   முன்னின்று   போராடுவதை நினைத்துப்  பார்க்கவே  சிரமமாக  உள்ளது”,  என்றாரவர்.

அடுத்த   வாரம்   நடைபெறவுள்ளது   மிக  முக்கியமான     பொதுத்   தேர்தல்  என்று  குறிப்பிட்ட   லிம்,   “இப்போது  இல்லையென்றால்  இனி  எப்போதும்  இல்லை”,  “ஒன்று  செய்து  முடிக்க   வேண்டும்    அல்லது   செத்து   மடிய   வேண்டும்”   என்ற  வகையைச்   சேர்ந்த    தேர்தல்   அது    என்றும்   கூறினார்.

மலாய்  சுனாமி   பற்றியும்   அவர்  குறிப்பிட்டார்.  மலாய்  சுனாமி   புத்ரா  ஜெயாவிலிருந்து   பராமரிப்பு     பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கையும்  பிஎன்னையும்   அடித்துச்  செல்லும்    அளவுக்குச்   சக்தி   படைத்ததாக  இருக்குமா   என்பது  மில்லியன்  டாலர்   கேள்வி    என்றாரவர்.

ஏப்ரல்  மாதத்   தொடக்கத்தில்     மலாய்  சுனாமி  ஒன்று   ஏற்பட்டது   என்றும்   அது  ஹரப்பானை   ஆட்சியில்   அமர்த்தும்   அளவுக்கு    வலுவானதல்ல    என்றும்   மெர்டேகா    ஆய்வு  மையத்தின்  கருத்துக் கணிப்பு   கூறியிருப்பதை     அவர்   சுட்டிக்காட்டினார்.

ஆனாலும்,  ஒரு  பொதுத்   தேர்தலில்    எதிர்பாராதது    எல்லாம்  நடக்கலாம்  என  லிம்  கூறினார்.

“நிலவரம்  சாதகமாக  இல்லைதான்  ஆனாலும்  61  ஆண்டுகளில்  முதல்   அரசியல்   மாற்றத்தை    ஏற்படுத்துவதற்குக்  கிடைத்துள்ள  ஒரு  பொன்னான    வாய்ப்பை   வீணாக்கிவிடக்   கூடாது”,  என்று   லிம்   மேலும்   கூறினார்.