இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன்  அதிகப் படியான இடங்கள் என்னவானது?

 

ஏழை இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் மற்றும் உயர் கல்விக் கூடங்களில்  அரசாங்கம்  அறிவித்த அதிகப்படியான 700 இடங்கள் என்னவானது என பக்காத்தான் ஹராப்பான் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

இந்தியர்களின்  கல்வி மற்றும் பொருளாதாரம் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இருந்தால் அது அறிவித்த அதிகப்படியான 700 இடங்களை ஒவ்வொரு  ஆண்டும் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தேர்தலுக்கும்  அறிக்கை மட்டும் வருகிறதே தவர இந்தியர்களுக்கு  இடம் கிடைப்பதில்லை.

கடந்த 13 பொதுத்தேர்தல் வேளையின் போதும் மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்க்கல்விக்கூடங்களில் இந்திய மாணவர்களுக்கு 700 அதிகப்படியான  இடங்கள் என்று பெரிய அளவில் அறிவித்து அரசாங்கம் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது, ஆனால், மாணவர்களைப் பற்பல இன்னல்களுக்கு அது ஆளாக்கியது.

இடம் கிடைத்த மாணவர்களின் விலாசத்திற்கு அனுப்ப வேண்டிய அனுமதி கடிதத்தைத் தவறா வேறு விலாசத்திற்கு அனுப்பியது, தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்களுக்கு  அனுப்ப வேண்டிய கடிதங்களை, தேர்வாகாதவர்களுக்கு அனுப்பியது, உயர்க்கல்விக் கூடங்களில் சேர வேண்டிய குறிப்பிட்ட தினத்திற்குப் பிறகு கடிதம் கிடைத்தது,  இறுதி நேரப் பதிவில் இடம் வழங்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு ஒழுங்கான தங்குமிடம்  வழங்காதது என்று பற்பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட நம் பிள்ளைகள் மீண்டும் அது போன்ற ஒரு நிலையை இவ்வாண்டும் எதிர்நோக்குவதைத் தவிர்க்க நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடந்த 2017ம் ஆண்டு, எஸ்பிஎம் கல்வியை முடித்து மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்க்கல்விக்கூடங்களில் சேர விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் பலருக்கு, கல்வித்துறையிடமிருந்து இன்னும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஆனால்  மற்ற இன மாணவர்கள் பலருக்கு  மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்க்கல்விக் கூடங்களிலிருந்து ஒப்புதல், மற்றும் பதிவுக்கான அழைப்பு கடிதம் கிடைத்து விட்டன என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இந்திய மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்க்கல்விக்கூடங்களில்  கூடுதல்  இடம் என்பது பிரதமரின் வெற்று தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அமைந்து விடக்கூடாது என்ற கவலை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.   இந்தத் தேர்தல் வேளையில் இது குறித்துச் சில பெற்றோர்கள்  தங்கள்  ஐயத்தைத் தெரிவித்து வருகின்றனர்  என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

அரசியல் கட்சிகள் மும்மரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதால், கல்வி, சமூக அரசு சார இயக்கங்கள் முன்னைய ஆண்டுகளைப் போன்று சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியப் பெற்றோர்களும், வாக்காளர்களைச் சந்திக்கும் அரசியல்வாதிகளிடம்  நமது பிள்ளைகளின் கல்வி மீதான தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தத் தவறக்கூடாது என்று  நினைவுறுத்தினார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.