மாட் சாபு இருப்பதே தெரியவில்லை, பிஎன் வேட்பாளர் கூறுகிறார்

மாட் சாபு இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வருவதே இல்லை, பிறகு எப்படி இத்தொகுதி மக்களுக்கு அவர் சேவையாற்றுவார் என கோத்தா ராஜா பி.என். வேட்பாளர், வி.குணாளன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக, எதிர்க்கட்சியினர் வசமானதிலிருந்து அத்தொகுதி எந்தவொரு முன்னேற்றத்தையும் அடையவில்லையென இன்று செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

அமானா தலைவருமான மாட் சாபு, சிலாங்கூரைச் சேர்ந்தவர் இல்லை என்றும் ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினருமான குணாளன் கூறினார்.

“நான் சிலாங்கூரில் பிறந்தவன், இந்த கோத்தா ராஜா தொகுதி மக்களுக்கு சேவையாற்றத் தயாராக இருக்கிறேன், என் வீடு அருகில்தான் (டெங்கில்) இருக்கிறது, நான் ம.இ.கா. செப்பாங் தொகுதித் தலைவர்.

“நான் கோத்தா ராஜாவில் பல இடங்களை நேரில் சென்று பார்த்திருக்கிறேன், ஆனால் ஒருமுறைகூட மாட் சாபுவை சந்தித்ததில்லை.

“இப்படிபட்டவர் வெற்றி பெற்றால்? அவரால் இத்தொகுதி மக்களின் நலனைப் பாதுகாக்க முடியாது,” என குணாளன் கூறினார்.

கோத்தா ராஜாவில் சுமார் 150,000 வாக்காளர்கள் உள்ளனர், இதில் 44 விழுக்காடு மலாய்க்காரர்கள், 28 விழுக்காட்டினர் முறையே சீனர் மற்றும் இந்தியர்கள்.

கோத்தா ராஜா மும்முனை போட்டியில், பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமட் டியா பஹாருன் தனக்கு சவாலாக இருப்பார் எனத் தான் கருதவில்லையெனவும் குணாளன் தெரிவித்துள்ளார்.