14வது பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் வேளையில் பிகேஆரில் மீண்டும் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதன் பினாங்கு மாநில இளைஞர் தலைவர் அஸ்ரோல் சானி அப்துல் ரசாக் பதவி விலகியுள்ளார்.
அஸ்ரோலுக்கு அவர் ஒருங்கிணைப்பாளராகவுள்ள பெர்தாம் உள்பட சில இடங்கள் பெர்சத்துக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது பிடிக்கவில்லை என பிகேஆரின் தேசிய இளைஞர் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டின் கூறினார்.
“தனிப்பட்டவர் நலனைக் கவனிக்காது கட்சிக்கு எது நல்லதோ அதைத்தான் கட்சித் தலைமை முடிவு செய்யும்”, என அபிப் மலேசியாகினியிடம் தெரிவித்தார். அபிப் பிகேஆரின் செபராங் ஜெயா வேட்பாளர்.
“சில வேட்பாளர்களைக் களமிறக்குவதில்லை என்ற கட்சியின் முடிவில் சிலருக்கு மனநிறைவு இல்லை.
“வேட்பாளர் பட்டியலைக் கட்சி முடிவு செய்கிறது. நாம் அந்த முடிவை மதிக்க வேண்டும்”, என்றாரவர்.