பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகம்மட்டும் நேற்றிரவு கோலாலும்பூரில் இருவேறு இடங்களில் தேர்தல் கூட்டங்களில் பேசினர்.
பிஎன் கூட்டம் வங்சா மாஜு நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றது. ஹரப்பான் அதன் கூட்டத்தை தித்திவங்சா நாடாளுமன்றத் தொகுதியில் நடத்தியது. இரண்டிலும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
பிஎன் ஆதரவாளர்களுக்கு கோம்பாக் சித்தியா மக்கள் குடியிருப்புத் திட்ட(பிபிஆர்)ப் பகுதியில் தார் சாலையில் வசதியான கூடாரங்கள் போடப்பட்டிருந்தன. ஹரப்பான் கூட்டம் தேசா பாண்டானில் ஒரு திடலில் நடந்தது.
தொடக்கத்தில் பிஎன் கூட்டத்தில் சுமார் 900பேர் இருந்தனர். ஆனால், ஹரப்பான் நிகழ்வில் மழை தூறிக்கொண்டிருந்தால் கூட்டம் குறைவாக இருந்தது. சுமார் 500 பேர்.
பலர் குடை ஏந்தி நின்றனர். சிலர் மழையில் நன்றாக நனைந்து போனார்கள். கூட்டத்தில் நின்ற ஒருவர் மயங்கி விழுந்தார்.
நேரம் ஆக ஆக கூட்டம் பெருகியது. மகாதிர் வரும் நேரத்தில் சுமார் 1,500பேர் இருந்தார்கள்.
மகாதிர் வந்து சேர்ந்ததும் கூட்டத்தினரின் ஆர்வமும் வேகமும் மேலோங்கியது.
“துன்னை நேசிக்கிறோம், துன் வாழ்க” முழக்கங்கள் அப்பகுதியை அதிர வைத்தன.
மழையையும் பொருட்படுத்தாம் கூட்டத்துக்கு வந்தவர்களின் மன உறுதியை மகாதிர் பாராட்டினார். இதே உறுதிப்பாட்டை மே 9-இலும் காண்பிக்க வேண்டும் என்றவர் நினைவுறுத்தினார்.
“மழை பெய்தாலும்கூட இன்று வந்ததுபோல் அன்றும் வந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்க வேண்டும்.
”வெற்றிபெறுவது மட்டும் நம் நோக்கமல்ல. மிகப் பெரிய வெற்றியைப் பெற விரும்புகிறோம்”, என்று மகாதிர் கூறினார். கூட்டம் பல இனத்தவரையும் கொண்டிருந்தது. என்றாலும், மலாய்க்காரர்களே அதிகம்.
பிஎன் கூட்டத்திலும் நஜிப் வந்து சேர்ந்தபோது ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குழுமி இருந்தனர். பிஎன் ஆதரவாளர்களுக்கு மழை பற்றிய கவலை இல்லை. மின் விளக்குகள், மின்விசிறிகளுடன் வசதியான கூடாரங்கள் அவர்களுக்காக போடப்பட்டிருதன.
நஜிப், தமதுரையில், வேட்புமனு நாளில் மைகார்ட்டை எடுத்துவர மறந்த பிகேஆர் வங்சா மாஜு வேட்பாளர் டான் ஈ கியு-வைக் கிண்டலடித்தார்.
“அவர்களின் வேட்பாளர் ஒரு தவணையுடன் தோற்றுப்போவோம் என்று அஞ்சி ஓடிவிட்டார். அதன் பின் அவர்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர் அடையாள அட்டை எடுத்துவர மறந்து கிட்டத்தட்ட தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கும் நிலைக்கு வந்து விட்டார்”, என்றவர் கூற கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.
நாடு சரியான தடத்தில் சென்று கொண்டிருப்பதாக நஜிப் வலியுறுத்தினார். மலேசியா நொடித்துப் போகும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
பிஎன் கூட்டம் ஒரு மணி நேரம் கட்டொழுங்குடன் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்திருந்தவர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.