முன்னாள் பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு முன்பு அக்கட்சிக்காக தென்னை மரங்கள் ஏறி கொடி கட்டியதையும் சுவ்ரொட்டிகள் ஓட்டுவதற்குச் சிரமப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
“பாஸ் சின்னங்களையும் கொடிகளையும் நிறுத்தி வைக்க தென்னைமரங்கள் ஏறுவோம். மரமேறுவதில் நெஞ்சு முடியெல்லாம் கொட்டிவிடும்” , என்று நேற்றிரவு கிள்ளானில் தேர்தல் கூட்டமொன்றில் கூறினார்.
ஆனால், இப்போதுள்ள பாஸ் வேறு மாதிரி என மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் கூறினார். அதன் சுவரொட்டிகள், பதாதைகள் தரமானவையாக, வண்ணமிக்கவையாக காணப்படுகின்றன.
“இதற்குப் பணம் எங்கிருந்து வந்தது?”, என்றவர் வினவினார்.
மாட் சாபு பாஸிலிருந்து வெளியேறி அமனா கட்சியை அமைத்தவர்களில் ஒருவர். அவரே அமனா தலைவருமாவார்.
பாஸ் கட்சியால் 547 நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களில், அம்னோ உள்பட மற்ற எல்லாக் கட்சிகளைவிட அதிகமான இடங்களில் போட்டிபோட முடிவது எப்படி என்றவர் கேட்டார்.
நாடாளுமன்றத்துக்குப் போட்டிபோடும் ஒருவர் ரிம10,000-மும் சட்டமன்றத்துக்குப் போட்டிபோடும் ஒரு வேட்பாளர் ரிம5,000-மும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். பரப்புரைச் சாதனங்களுக்காக ஊராட்சி மன்றங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் தனி.
பாஸைப் பற்றிக் குறைகூறுவோர் அக்கட்சிக்கு அம்னோ பணம் கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டுவதுண்டு. பாஸ் தலைவர்கள் அதைத் தொடர்ந்து மறுத்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் யுகே நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாஸ், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோவுக்கு ரிம90மில்லியன் கொடுத்ததாக ஒரு செய்திக்கட்டுரையில் கூறிய சரவாக் ரிப்போர்ட்டின் லண்டன் ஆசிரியர் கிளேய்ர் ரியுகாசல்- பிரவுன்மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளது.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அக்கட்சி அம்னோவுடன் கமுக்கமாக ஒத்துழைத்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுவதை மறுத்து வந்துள்ளார்.
மாட் சாபு கிள்ளான் , கோட்டா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சிலாங்கூரைச் சேர்ந்தவர் அல்லர் என்று பிஎன் தரப்பில் கூறப்படுவதற்கும் அவர் பதிலடி கொடுத்தார்.
“ஆமாம், நான் பினாங்கு, திரெங்கானு, கிளந்தான் ஆகிய இடங்களில் போட்டியிட்டிருக்கிறேன்.
“ஆனால், 40 ஆண்டுகளாக நான் சிலாங்கூர் , ஷா ஆலமில்தான் குடியிருந்து வருகிறேன்”, என்றவர் சொன்னார்.
எனவே, இப்போது கோட்டா ராஜாவில் போட்டியிடுவது “பாலேக் கம்போங்” போன்றதுதான் என்றாரவர்.