பாயா ஜாராஸ், எல்மினா தோட்ட மக்கள் அழுக்கு நீரை அருந்தி, உயிர் வாழ்கின்றனர்

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் பாயா ஜாராஸ், எல்மினா தோட்ட மக்கள், தினமும் அழுக்கு நீரை அருந்தி வருவதாக புகார் அளித்தது தங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியது.

சைம் டர்பி எல்மினா டெவலப்மென்ட் சென்.பெர். நிறுவனம் மேற்கொண்டுவரும் ஒரு மேம்பாட்டுத் திட்டத்தின் காரணமாக குடிநீர் குளம் அழுக்கடைந்துள்ளதாகத் தெரிகிறது.

அழுக்கடைந்த அக்குளத்திலிருந்து தங்கள் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதாக அத்தோட்டத்து மக்கள் தங்களிடம் புகார் அளித்ததாக கோத்தா டாமான்சாரா சட்டமன்றத் தொகுதியின் பி.எஸ்.எம். வேட்பாளர் சிவராஜன் ஆறுமுகம் தெரிவித்தார்.

இன்று காலை, சுங்கை பூலோ நாடாளுமன்ற பி.எஸ்.எம். வேட்பாளர் ஜேக்-உடன் அத்தோட்டத்து மக்களைச் சந்தித்த சிவராஜன், “முன்னேற்றமடைந்துள்ள சிலாங்கூர் மாநிலத்தில், இந்த 2018-ம் ஆண்டிலும், மக்கள் அழுக்கடைந்த குளத்து நீரை அருந்தி உயிர் வாழ்கிறார்கள் என்பது வருத்தமளிக்கும் ஒரு விஷயம்,” என்றார்.

ஆ.சிவராஜன் & ஜேக்

“இவர்கள் சைம் டர்பி நிறுவனத்திடம் வீட்டுரிமை கேட்டு போராடிவரும் எல்மினா தோட்டத் தொழிலாளர்கள்.”

வெளிநாட்டு குத்தகைத் தொழிலாளர்களுக்கு ‘ஷபாஸ்’ நிறுவனத்தின் குழாய்நீர் வழங்கப்படும் போது, இவர்களுக்கு அழுக்கடைந்த குளத்து நீர் வழங்கப்படுவது தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“எல்மினா தோட்டத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குத் தூய்மையான குழாய் நீர் வழங்கப்படுகிறது. அந்த நீர் குழாயும் டாங்கியும், உள்நாட்டுத் தொழிலாளர்கள் வீட்டுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது, ஆனால் அவர்கள் அந்நீரைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தொழிலாளர்கள் எங்களிடம் கூறியது அதிர்ச்சியளிக்கிறது,” என்று சிவராஜன் நம்மிடம் தெரிவித்தார்.

பலமுறை அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசாவையும் அவரது உதவியாளர் நவீனையும் தொலைபேசியில் அழைத்து அத்தோட்டத் தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதுவரை அவர்கள் அப்பிரச்சனைக்குத் தீர்வுகாண அங்கு வந்ததில்லை என்று அம்மக்கள் தெரிவித்தனர்.

சைம் டர்பி நிறுவனம் அத்தொழிலாளர்களை, அவர்களின் குடியிறுப்பிலிருந்து கட்டாய வெளியேற்றம் செய்துள்ளது. இந்த வீட்டுப் பிரச்சனையை வழக்கறிஞரான சிவராசா கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இவ்வழக்கு விசாரணையின் போது, சிவராசா நீதிமன்றம் வரத் தவறியதால், வழக்கு சைம் டர்பிக்கு ஆதரவாக

தீர்ப்பானது. எனவே, சைம் டர்பி இத்தொழிலாளர்களை அவர்களின் குடியிருப்பிலிருந்து வெளியேறும்படி நோட்டிஸ் கொடுத்துள்ளது.”

“இன்று காலை, நாங்கள் அத்தொழிலாளர்களுடன் கலந்துரையாடினோம், குடிநீர் பிரச்சனை குறித்து தொழிலாளர்துறை இலாகாவில், விரைவில் புகார் அளிக்கவுள்ளோம்,” என்றும் சிவராஜன் சொன்னார்.

மேலும், இன்று, சைம் டர்பி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, அந்த நோட்டிஸ்சை நடைமுறைபடுத்த வேண்டாம் என்றும், 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தொழிலாளர் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறும் பி.எஸ்.எம். கேட்டுக்கொண்டதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளருமான ஆ.சிவராஜன் தெரிவித்தார்.