நஜிப்பின் வாசல்படிக்கே சண்டையைக் கொண்டுவந்து விட்டார் மகாதிர்!

 

பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிருக்கும் பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப்புக்கும் இடையிலான அரசியல் போரை நஜிப்பின் வாசல்படிக்கே கொண்டுவந்து விட்டார் மகாதிர்.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் நஜிப்புக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை நடத்த மகாதிர் பெக்கானுக்கு வந்துள்ளார்.

பெக்கானில் அம்னோ அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் கோப்பிக் கடை தாழ்வாரத்தின் கீழ் மகாதிர் புன்னகையோடு படம் எடுத்துக்கொள்ளும் காட்சிகள் முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் நிதி அமைச்சர் டைம் உடனிருந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாதிர், இன்றிருக்கும் அம்னோ கடந்த காலங்களில் இருந்த அம்னோ போன்றதல்ல என்றார்.

இப்போது இருக்கும் அம்னோ ஓன் பின் ஜாபார், துங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ரசாக் மற்றும் ஹுசான் ஓன் ஆகியோர் அமைத்த அம்னோ போன்றதல்ல என்று அவர் கூறியது அவரது முகநூல் ரசிகர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று அவர் விடுத்த அறிக்கை ஏப்ரல் 17 இல் அவர் அம்னோ உறுப்பினர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தின் கருத்தை எதிரொலித்தது. அதில் அவர்கள் நஜிப்புக்கு அளிக்கும் ஆதரவு குறித்து மீண்டும் சிந்திக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

கட்சி (அம்னோ) அதன் பெருந்தன்மைமிக்க மூலகாரணங்களை இழந்து விட்டது என்று குற்றம் சாட்டிய மகாதிர், அது இபோது நஜிப்பின் “குற்றங்களை” நியாயப்படுத்துவதற்காக மட்டுமே இருக்கிறது என்றாரவர்.