ஜிஇ14 வாக்காளர் பட்டியலில் 10 சிக்கல்கள், பெர்சே கேள்வி எழுப்பியுள்ளது

14-வது பொதுத் தேர்தல் (ஜிஇ14) வாக்காளர் பட்டியலில், பத்து முக்கிய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பெர்சே மற்றும் ‘எங்கேஜ்’ அரசு சாரா அமைப்புகள் கூறியுள்ளன.

இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அந்த இரு அரசு சாரா அமைப்புகளும் தற்போதைய மற்றும் முந்தைய வாக்காளர் பட்டியல் பகுப்பாய்வில் அவை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ளன.

அந்தப் பத்து முறைகேடுகளும் பின்வருமாறு:

  1. இறந்த வாக்காளரை, ஒரு புதிய வாக்காளராக மீண்டும் பதிவு செய்தது. (23 வழக்குகள்)
  2. முன்னாள் குடிமக்களைப் புதிய வாக்காளர்களாக பதிவு செய்தது. (48 வழக்குகள்)
  3. ஜிஇ12-ல் வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர், ஜிஇ13 பட்டியலில் காணாமல் போய், கூடுதல் பதிவுகள் என்று குறிப்பிடப்படாமல், மீண்டும் ஜிஇ-14 பட்டியலில் தோன்றியுள்ளன. (2,015 வழக்குகள்)
  4. தேசியப் பதிவு இலாகாவில் செயலற்று இருந்ததால் நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்கள், புதிய வாக்காளர்களாக மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  5. மிக அதிகமாக, அடிக்கடி தங்கள் முகவரியை மாற்றும் வாக்காளர்கள். (1,000 வழக்குகளுக்கும் மேல்)
  6. அடையாள அட்டையில் இருக்கும் பிறந்த வருடத்துடன் ஒத்து இல்லாத வாக்காளர்களின் பிறந்த வருடம். (795 வழக்குகள்)
  7. ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்ட அதிகமான வாக்காளர்கள். (500,000 வழக்குகள்)
  8. சுமார் 15 விழுக்காடு வாக்காளர்களுக்கு முகவரி இல்லை (2,123,973 வழக்குகள்).
  9. ஓய்வுபெற்ற போலிஸ்காரர்களும் முதல்கட்ட வாக்காளர்களாக உள்ளனர். இவர்களுக்கு வாக்குச் சீட்டுகள் திரும்பத் திரும்பக் கொடுக்கப்படுகிறது. (3,525 வழக்குகள் – இதில் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கர் மற்றும் இஸ்மாயில் ஓமர் உள்ளிட்ட பெயர்களும் உண்டு)
  10. ஒரே அடையாள அட்டை வெவ்வேறு வாக்காளர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த ஒழுங்கற்றத் தன்மை புதியது அல்ல, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் சரிசெய்ய வேண்டும் என்று, நாடாளுமன்றத் தேர்தல் குழுவில் 2011-லேயேக் குறிப்பிடப்பட்டிருந்தது எனப் பெர்சே மற்றும் எங்கேஜ் தெரிவித்தன.

“ஆனால் இந்த முறைகேடுகள் இன்னும் இருப்பதில் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம், அதுவும் அடுத்த வாரம் ஜிஇ14 நடைபெறவுள்ளது.

“வாக்காளர் பட்டியலில் நேர்மை, நியாயமான மற்றும் சுத்தமான தேர்தலுக்கான முக்கிய கூறுகளில் ஒன்றாகும். பல பலவீனங்களைக் கொண்ட வாக்காளர் பட்டியல் தேர்தலின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புகிறது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அந்தப் பலவீனங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அண்மைய வாக்காளர் பட்டியலில் சுயாதீனமான தணிக்கைகளைச் செய்ய வேண்டுமென அவர்கள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினர்.

“நாடு முழுவதும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள சந்தேகத்திற்குரிய வாக்காளர்களின் பட்டியலை வாக்குப்பதிவு முகவர்களுக்கு நாங்கள் கொடுத்து உதவுவோம்,” என்றும் அவர்கள் கூறினார்.