மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கோத்தா டாமான்சாரா சட்டமன்ற வேட்பாளர் ஆ.சிவராஜன், அத்தொகுதியைச் சேர்ந்த 50,438 வாக்காளர்களும் அவர்களுக்குச் சேவையாற்ற, தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
13-வது பொதுத் தேர்தலில், அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நசீர் ஹசிம் சில காரணங்களால் தோல்வியைத் தழுவிய போதிலும், பி.எஸ்.எம். அங்குள்ள மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி வந்துள்ளது என 49 வயதான சிவராஜன் தெரிவித்தார்.
“இதுவரை நான் எதிர்க்கட்சியினரிடையே ஏற்பட்ட பிளவு பற்றியும், இம்முறை பி.எஸ்.எம். ஏன் சொந்தச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்றும் விளக்கப்படுத்தியுள்ளேன்.
“நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம், பாரிசான் நேசனலை (பிஎன்) நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் போட்டியிடும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரிக்கிறோம்.
“எதிர்க்கட்சி வேட்பாளர்களில் சிறந்த வேட்பாளரைத் தேர்வு செய்து வாக்களிக்க நான் மக்களை அறிவுறுத்துகிறேன்,” எனக் கட்சியின் சேவை மையத்தில் இன்று சந்தித்த போது அவர் கூறியதாக ‘தி சான் டெய்லி’ செய்தி வெளியிட்டுள்ளது.
பி.கே.ஆர்., பாஸ் மற்றும் பி.என். உடனான 4 முனை போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும் என பி.எஸ்.எம். தோற்றுநர்களில் ஒருவருமான சிவராஜன் தெரிவித்தார்.
“2013-ல், எங்களோடு இணைந்து தேர்தல் பணியாற்றி வந்த பாஸ், இறுதி நேரத்தில் தனது வேட்பாளரை நிறுத்தி, 7,000 வாக்குகளைப் பெற்று எங்கள் வெற்றி வாய்ப்பை அழித்தது, எங்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது,” என்றார் அவர்.
“இருப்பினும், நாங்கள் இதுவரை செய்துவந்த சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் எங்களை மீண்டும் தேர்ந்தெடுப்பர் என நாங்கள் நம்புகிறோம்.
கோத்தா டாமான்சாரா நகர்ப்புற இடமாக இருந்தாலும், அத்தொகுதி மக்களில் 46 விழுக்காட்டினர் நகர்புற ஏழைகள் என்று சிவராஜன் சொன்னார்.