மலேசிய சோசலிசக் கட்சியின் செமிஞ்சே சட்டமன்ற வேட்பாளர் எஸ்.அருட்செல்வன் தனது 15 அம்சத் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டதோடு, வாக்காளர்களுக்கு உறுதி வழங்கும் வகையில் தனிப்பட்ட கடிதம் ஒன்றில் கையெழுத்தும் இட்டார்.
பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், அத்தொகுதி நிர்வாகத்தில் குடியிருப்பாளர்களின் நேரடி பங்கேற்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாடுகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நான்கு பிரதான செயற்பாடுகளாக அந்தத் தேர்தல் அறிக்கை பிரிக்கப்பட்டுள்ளது.
அதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக, குறைந்த விலை அடுக்குமாடி வீடுகள் பராமரிப்பு மற்றும் அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டம் ஆகியவையும் அடங்கும்.
பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசு அளித்துள்ள மலிவுவிலை அடுக்குமாடி வீடுகளுக்கான மதிப்பீட்டு வரி விலக்குக்குப் பதிலாக, வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களிலிருந்து குடியிருப்பாளர்களுக்கு விலக்களிக்க வேண்டுமென அருட்செல்வன் முன்மொழிந்துள்ளார்.
தரை வீடுகளில் வசிக்கிறவர்கள் போலல்லாமல், மலிவுவிலை அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் பலர் பராமரிப்பு செலவினப் பணத்தைச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர் என்றார் அவர்.
“ஆக, நாங்கள் மலிவுவிலை அடுக்குமாடி வீடுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டு, மதிப்பீட்டு வரியை மீண்டும் நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
“சேகரிக்கப்படும் தொகையை, உள்ளூராட்சி மன்றங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பராமரிக்க பயன்படுத்தும்,” என செமிஞ்சேவில் உள்ள ஓர் உணவகத்தில், தேர்தல் அறிக்கையை வெளியீடு செய்தபோது அருட்செல்வன் கூறினார்.
அரசாங்க உள்ளூர் கிளினிக்கை மேம்படுத்தி, பொது மருத்துவமனையாக மாற்றியமைத்தல், கூடுதலாக ஒரு எம்.ஆர்.டி. நிலையம் – காஜாங் ஸ்டேடியத்திலிருந்து செமிஞ்சேவிற்கு, பெரனாங்கை இணைக்கும் பேருந்து வசதியோடு போன்றவற்றையும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
மக்களின் நேரடியான பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்கள், மலிவுவிலை அடுக்குமாடி மற்றும் குடியிருப்பு பகுதித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளூராட்சி தேர்தல்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அருட்செல்வன் உறுதியளித்தார்,
‘கடுமையான பிரச்சார காலம்’
அருட்செல்வன் மூன்றாவது முறையாக செமிஞ்சேயில் போட்டியிடுகிறார். அண்மையில் தேர்தல் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னர், ஶ்ரீ புத்ரா மற்றும் சுங்கை கந்தானைச் சேர்ந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, மலாய் வாக்காளர்களின் எண்ணிக்கையை 68 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
“இதுவரை எங்களுக்கான ஆதரவு நன்றாகவே உள்ளது ….. ஆனால், வானிலை மோசமாக உள்ளது, பகலில் மிகவும் சூடாக இருக்கிறது, இரவில் மழை பெய்கிறது.
“இரவில் நாங்கள் ‘செராமா’ ஏற்பாடு செய்திருந்தோம், மழை காரணமாக பலர் வரவில்லை,” என்று கூறிய அருட்செல்வன், பெரனாங்கில் உள்ள மலாய் கிராமங்களில் நுழைய சிரமங்களை எதிர்நோக்குவதையும் ஒப்புக் கொண்டார்.
செமிஞ்சேயில், பி.என். , பி.கே.ஆர் மற்றும் பாஸ் உடன் 4 முனை போட்டியை அருட்செல்வன் எதிர்கொண்டுள்ளார்.