பத்து நாடாளுமனறத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் தியன் சுவா 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அவரது வேட்பாளர் மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை அந்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தியன் சுவா தாக்கல் செய்துள்ள மனு தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வேட்பாளர் பத்திரங்கள் சம்பந்தப்பட்டதாகும். அது தேர்தல் நடவடிக்கையின் ஓர் அங்கமாகும் என்று நீதிபதி நோர்டின் ஹசான் கூறினார்.
பெடரல் அரசமைப்புச் சட்டம், பிரிவு 118 ஐ சுட்டிக் காட்டி தேர்தல் முடிவுகள் மீதான எந்தச் சவால்களும் தேர்தல் விண்ணப்பம் (election petition) மூலம் மேற்கொள்ளப்பட்டு அந்தத் தேர்தல் விண்ணப்பம் ஒரு தேர்தல் நீதிபதியால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி நோர்டின் அவரது தீர்ப்பில் கூறினார்.
ஆகவே, தேர்தல் நியமனப் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படுவது மீதான தியன் சுவாவின் சவால் ஒரு தேர்தல் விண்ணப்பத்தின் மூலம் இருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி நோர்டின், தமக்கு தேர்தல் விண்ணம் சார்ந்த வழக்குகளை செவிமடுக்கும் சட்ட அதிகாரம் இல்லை என்று மேலும் கூறினார்.
தியன் சுவா தாக்கல் செய்துள்ள மனு பெடரல் அரசமைப்புச் சட்டம், பிரிவு 118 க்கு முரணானதாகும். அதன் அடிப்படையில் இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி நோர்டின் ஹசான் தீர்ப்பளித்தார். செலவுத் தொக்கைக்கு உத்தரவிடவில்லை.
மேல்முறையீடு செய்யப்படும்
இன்று நீதிபதி நோர்டின் ஹசான் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று தியன் சுவா கூறினார்.
தேர்தலுக்குப் பின்னர், ஒரு தேர்தல் விண்ணப்பம் செய்வது பற்றியும் சிந்திப்பேன் என்றாரவர்.
தியன் சுவாவை வழக்குரைஞர்கள் குர்தியால் சிங் நிஜார், அம்பிகா ஶ்ரீனிவாசன் மற்றும் லிம் வே ஜியட் ஆகியோர் பிரதிநிதித்தனர்.