14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாஸும் பிஎன்னும் ஒத்துழைத்துக் கூட்டு அரசாங்கம் அமைத்தால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என பாஸ் தலைவர் ஹாடி ஆவாங் கூறினார்.
ஆனால், அப்படி ஓர் ஒத்துழைப்பு ஏற்பட பிஎன் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.
“பாஸ் பிஎன்னுடன் ஒத்துழைப்பது விசித்திரமல்ல. ஆனால், பிஎன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்”. நேற்று தித்திவங்சா நாடாளுமன்றத் தொகுதி பாஸ் வேட்பாளர் முகம்மட் நூர் முகம்மட்டுடன் பேச்சுகள் நடத்திய பின்னர் ஹாடி செய்தியாளர்களிடம் பேசினார்.
“பிஎன்னிடம் சில நிபந்தனைகளை முன்வைப்போம். ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அதனைப் பொருத்தது”, என்றார்.
ஆனால், செய்தியாளர்கள் எவ்வளவு கேட்டும் நிபந்தனைகள் என்னவென்பதை அவர் குறிப்பிடவில்லை.