பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா 14வது பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பி. பிரபாகரனை ஆதரிக்கிறார்.
பிரபாகரனை ஆதரிக்கும் முடிவு ஹரப்பான் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு அதற்கு அவர்களின் ஆசியும் கிடைத்துள்ளது என்றாரவர்.
“பிரபாகரன் இளைஞர், துடிப்பானவர். பொதுத் தேர்தலில் அவருக்கு நான் வழிகாட்டியாக இருப்பேன்.
“பத்து மக்கள் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை வலியுறுத்தும் கையேடுகள் தயாரிப்போம். பத்து தொகுதி பக்கத்தான் (ஹரப்பான்) வசமே இருப்பது முக்கியம்”, என்று அத்தொகுதியின் நடப்பு எம்பியான தியான் சுவா கூறினார்.
வரும் தேர்தலில் தியான் சுவா போட்டியிட முடியாது.
அவர் தமது வேட்பாளர் மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதனை அடுத்து பிரபாகரனை ஆதரிக்க முடிவு செய்துள்ள தியான் சுவா அவருக்காகப் பரப்புரைகளில் ஈடுபடப் போவதாகக் கூறினார். உதவிக்கு ஹரப்பான் தலைவர்களையும் அழைப்பார்.
இதனிடையே, இன்றைய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.