ரந்தாவ் இருக்கையின் முடிவு கெஜெட்டில் பதிவு; ஶ்ரீராம் வழக்குத் தொடர்கிறார்

 

நெகிரி செம்பினான், ரந்தாவ் மாநில சட்டமன்ற தொகுதியை போட்டியின்றி பராமரிப்பு மந்திரி செசார் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அம்முடிவு அரசாங்க ஏட்டில் (கெஜட்டில்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றையத் தேதியிட்ட கடிதத்தில் தேர்தல் ஆணையம் இதனைத் தமக்குத் தெரிவித்துள்ளாக ஶ்ரீராமின் வழக்குரைஞர் முகமட் ஹனிப் காட்ரி தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமை, தேர்தல் ஆணையம், சிரம்பான் மற்றும் தேர்தல் ஆணையம், புத்ராஜெயா ஆகியவற்றுக்கு பல கோரிக்கைகள், வேண்டுகோள்கள் மற்றும் விளக்கங்கள் கோரும் கடிதத்தை ஶ்ரீராம் அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்திற்கு முறையான பதில் எதுவும் அளிக்காமல், ரந்தாவ் தொகுதி முடிவு அரசாங்க ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மட்டும் கூறும் கடிதம் தங்களுக்குக் கிடைத்தாக ஹனிப் கூறினார்.

இதன் விளைவாக, தேர்தல் குற்றங்கள் சட்டம் 1953, செக்சன் 38(1) இன் கீழ் அடுத்த 21 நாள்களுக்குள் தேர்தல் விண்ணப்பம் (Election petition) தாக்கல் செய்யப்பட வேண்டும். இது அடுத்த வாரம் செய்யப்படும்.

தேர்தல் ஆணையம் அதன் நடவடிக்கைகளின் வழி ரந்தாவ் தொகுதி மக்கள் அவர்களின் பிரதிநிதியைத் தேர்வு செய்யும் உரிமையை அது திருடி விட்டதாகும் என்று ஹனிப் மேலும் கூறினார்.

கடந்த திங்கள்கிழமை, தாம் ஏன் நியமிக்கப்படக் கூடாது என்பதற்கு புதன்கிழமை மாலை மணி 5.00க்குள் விளக்கும் அளிக்கக் கோரும் கடிதம் ஒன்றை ஶ்ரீராம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தார்.