போலீஸ் படை உறுப்பினர்கள் அவர்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்று போலீஸ் படையின் தலைவர் முகமட் ஃபூஸி ஹருண் கூறினார்.
அவர்களுடைய வாக்குகள் இரகசியமானவை என்று அவர் உறுதி அளித்தார்.
“அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. எல்லா வாக்குகளும் இரகசியமானவை. இதை போலீஸ் படைக்குள் நாங்கள் நிச்சயமாக நடைமுறைப்படுத்துகிறோம்.
“அவர்கள் (போலீஸ் படையினர்) தீர்மானிப்பார்கள். அவர்கள் தேர்வு செய்யும் கட்சிக்கு வாக்களிப்பது அவர்களின் உரிமை”, என்று அவரை மேற்கோள் காட்டி த ஸ்டார் ஓன்லைன் செய்தி கூறுகிறது.
போலீஸ் படையில் 111,702 முன்னதாக வாக்களிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 5,600 வாக்காளர்கள் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திலும் மற்ற 106,042 வாக்காளர்கள் இதர மாநிலங்களில் தேசிய அளவில் இருக்கின்றனர் என்றாரவர்.
முன்னதாக வாக்களிக்கும் நடைமுறை சனிக்கிழமை (மே 5) காலை மணி 9.00 க்கு தொடங்கி மாலை மணி 5.00 க்கு முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
இன்று மதியம். முன்னதாக வாக்களிப்போர்களுக்கு விடுத்த ஒரு வேண்டுகோளில் பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் ரசாக், பாதுகாப்புப் படையினர் பிஎன் -னுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிஎன் அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் அவர்களின் தியாகங்களைப் போற்றுவதில்லை என்று கூறிய நஜிப், எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதாக கூறியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த புதன்கிழமை, பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் இராணுவப் படைகளின் தளபதிகளுக்கு அனுப்பிய ஒரு திறந்த மடலில் இராணுவப் படை உறுப்பினர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார்.